செய்திகள்
மதுவிற்பனை

மது என ரூ.300-க்கு சுக்குகாபி வாங்கி குடித்து ஏமாந்த ‘குடி’மகன்கள்

Published On 2020-04-04 12:52 GMT   |   Update On 2020-04-04 12:52 GMT
மது என நினைத்து ரூ.300-க்கு சுக்குகாபி வாங்கி குடித்து ஏமாந்த ‘குடி’மகன்கள் பற்றிய சம்பவம் வைரலாகி வருகிறது.
விருதுநகர்:

விருதுநகர் ராமமூர்த்தி சாலையில் ரெயில்வே மேம்பாலத்துக்கு அடியில் விதிமுறைகளை மீறி திருட்டுத்தனமாக மதுவிற்பனை நடைபெறும். போலீசார் அவ்வப்போது நடவடிக்கை எடுப்பதுண்டு. தடை உத்தரவு அமலில் உள்ள நிலையில் மதுபான கடைகளும் மூடிக்கிடக்கின்றன. இந்த சூழலில் மதுபிரியர்களை நூதன முறையில் ஏமாற்றி 2 வாலிபர்கள் பணம் பறித்துள்ளனர்.

அதாவது, 2 வாலிபர்கள் ஒரு மோட்டார் சைக்கிளில் அங்கு வந்துள்ளனர். தங்களிடம் மதுபாட்டில் உள்ளதாகவும் ரூ.300 கொடுத்து வாங்கிக்கொள்ளலாம் என்றும் அந்த பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுக்கூடம் முன்பு தவமிருந்த மது பிரியர்களிடம் ஆசை வார்த்தை கூறினர். இதனை நம்பி அங்கிருந்த சிலர் ரூ.300 கொடுத்து குவாட்டர் மதுபாட்டிலை வாங்கியுள்ளனர். மதுபாட்டில்களை விற்பனை செய்தவுடன் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரும் போலீசார் வருவதாக கூறவே பாட்டில்களை வாங்கியவர்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். மோட்டார் சைக்கிளில் வந்தவர்களும் பணம் சம்பாதித்த மகிழ்ச்சியுடன் கிளம்பிச் சென்றனர்.

மதுபாட்டில்கள் கிடைக்காமல் இருந்த வேதனையில் இருந்த மதுபிரியர்கள் கிடைத்த மதுபாட்டிலை வீட்டுக்கு கொண்டு செல்லக்கூட பொறுமை இல்லாமல் போகும் வழியிலேயே அதனை திறந்து ருசி பார்த்தபோது பாட்டிலில் இருந்தது உடலுக்கு ஆரோக்கியம் தரும் சுக்குகாபி என்பது தெரிந்தது.

மது கிடைக்கவில்லை என்ற வேதனையில் இருந்தவர்கள் ரூ.300 கொடுத்து சுக்குகாபி வாங்கியதுதான் மிச்சம். ஊரடங்கு உத்தரவு சிலரை நூதன முறையில் ஏமாற்றி பணம் சம்பாதிக்கவும் வழி வகுத்துள்ளது என்பதற்கு இந்த சம்பவம் ஓர் உதாரணம்.
Tags:    

Similar News