செய்திகள்
மருந்து பொருட்களை வீடுதேடி கொடுத்த கும்பகோணம் போலீசார்

வாட்ஸ்-ஆப்பில் தகவல் தெரிவித்தால் மருந்து பொருட்கள் வீடுதேடி வரும் - கும்பகோணம் போலீசார் அசத்தல்

Published On 2020-04-04 07:30 GMT   |   Update On 2020-04-04 07:30 GMT
கும்பகோணத்தில் வாட்ஸ்-அப்பில் தகவல் தெரிவித்தால் வேண்டிய மருந்து வீடு தேடி வரும் வகையில் போலீசார் ஏற்பாடு செய்துள்ளனர்.
கும்பகோணம்:

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியே வரமுடியவில்லை. கும்பகோணம் நகரமே முடங்கி கிடக்கிறது. எப்போதும் சுற்றுலா பயணிகளால் நிரம்பி வழியும் சாலைகள் பல வெறிச்சோடி காணப்படுகின்றன.

காலை, மாலை 2 வேளை நடைபயிற்சிக்காக வெளியே சென்று வந்த முதியவர்களும் தற்போது வீட்டிலேயே பொழுதை கழிக்க வேண்டி உள்ளது. உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வரும் முதியவர்கள் வீட்டை விட்டு வெளியே வரமுடியாத நிலையில் உள்ள பொதுமக்கள் மருந்து பொருட்களை வாங்க மிகவும் அவதிப்பட்டு வருகிறார்கள்.

இந்தநிலையில் கும்பகோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் ஒரு குழு அமைத்து நோயாளிகள் மற்றும் வெளியே வரமுடியாத நிலையில் உள்ளவர்களுக்கு தேவையான மருந்து பொருட்களை வாங்கி கொடுக்க ஏற்பாடு செய்தார். இந்த செயல் பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றதை தொடர்ந்து இந்த குழுவினருக்கு ஏராளமானோர் தங்களுக்கு மருந்து, மாத்திரைகள் வாங்கி கொடுக்க வேண்டி கோரிக்கை விடுத்தனர்.இதனைதொடர்ந்து இந்த சேவை தற்போது வாட்ஸ்-அப் சேவையாக மாற்றப்பட்டுள்ளது. வாட்ஸ்-அப்பில் தகவல் தெரிவித்தால் வேண்டிய மருந்து வீடு தேடி வரும் வகையில் போலீசார் ஏற்பாடு செய்துள்ளனர்.

இதுகுறித்து துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

உடல் நலக்குறைவால் வீட்டைவிட்டு வெளியே வரமுடியாத நிலையில் இருப்பவர்களால் இந்த நெருக்கடியான சூழ்நிலையை சமாளிக்க முடியவில்லை. அவர்கள் வெளியே வந்தாலும் தங்களுக்கு தேவையான மருந்து பொருட்களை வாங்க முடியவில்லை. எந்த மருந்து கடையில் எந்த மருந்து கிடைக்கிறது? என்ற தகவல் அவர்களுக்கு தெரியவில்லை. அதுபோன்ற நபர்களுக்கு உதவும் நோக்கத்துடன் இந்த வாட்ஸ் அப் சேவை தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி வாட்ஸ்-அப் எண்கள் 9791722688, 6383108227 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு மருந்து பொருட்கள் குறித்த தகவலை தெரிவித்தால் போலீசார் வீடு தேடி சென்று மருந்தை கொடுத்து அதற்குரிய பணத்தை பெற்றுக்கொள்வார்கள்.

இந்த சேவை ஊரடங்கு அமலில் உள்ள நாள் வரை நடைமுறையில் இருக்கும். சமூக இடைவெளியை பின்பற்றி மக்கள் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்றும், அரசின் அறிவிப்பை மக்கள் முழுமையாக பின்பற்ற வேண்டும் என்ற நோக்கத்துடனும் இந்த சேவை செய்யப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News