செய்திகள்
கோப்புபடம்

ஊரடங்கால் தீப்பெட்டி தொழிலாளர்கள் 4 லட்சம் பேர் வேலையின்றி தவிப்பு

Published On 2020-04-01 03:18 GMT   |   Update On 2020-04-01 03:18 GMT
ஊரடங்கு உத்தரவு காரணமாக தீப்பெட்டி தொழிற்சாலைகள் மூடப்பட்டதால், கோவில்பட்டி பகுதியில் 4 லட்சம் தொழிலாளர்கள் வேலையின்றி தவித்து வருகின்றனர்.
கோவில்பட்டி:

கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த நாடு முழுவதும் வருகிற 14-ந்தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் தீப்பெட்டி தொழிற்சாலை, பட்டாசு ஆலை, நூற்பாலை போன்ற அனைத்து தொழிற்சாலைகளும் மூடப்பட்டு உள்ளன.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, கழுகுமலை, கடம்பூர் பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட பகுதி எந்திர தீப்பெட்டி தொழிற்சாலைகளும், 10-க்கும் மேற்பட்ட முழு எந்திர தீப்பெட்டி தொழிற்சாலைகளும் உள்ளன. மேலும் தீக்குச்சி தயாரிக்கும் தொழிற்சாலைகள், தீக்குச்சிகளை பெட்டிக்குள் அடைக்கும் தொழிற்சாலைகள் போன்றவையும் ஏராளமாக உள்ளன.

இவற்றின் மூலம் சுமார் ஒரு லட்சம் தொழிலாளர்கள் நேரடியாகவும், 3 லட்சம் தொழிலாளர்கள் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெறுகின்றனர். இங்கு பெரும்பாலும் பெண்களே பணியாற்றுகின்றனர். தற்போது ஊரடங்கு உத்தரவால் தீப்பெட்டி தொழிற்சாலைகள் அனைத்தும் மூடப்பட்டதால், அனைத்து தொழிலாளர்களும் வேலையின்றி தவித்து வருகின்றனர்.

இதுகுறித்து தொழிலாளர்கள் கூறுகையில், “‘தினக்கூலி தொழிலாளர்களான தாங்கள் ஊரடங்கு உத்தரவால் வேறு எந்த வேலைக்கும் செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே, தீப்பெட்டி தொழிலாளர்களுக்கு அரசு நிவாரண உதவி வழங்க வேண்டும்” என்று வலியுறுத்தினர்.

மேலும் தீக்குச்சி தயாரிக்கும் தொழிற்சாலைகளுக்கு தேவையான மரக்கட்டைகளை கேரளா, கர்நாடகா போன்ற வெளிமாநிலங்களில் இருந்தும், கனடா போன்ற வெளி நாடுகளில் இருந்தும் கொள்முதல் செய்கின்றனர். இந்த மரக்கட்டைகளை குறிப்பிட்ட நாட்களில் பதப்படுத்தி தீக்குச்சிகளாக மாற்றவில்லையெனில் வீணாகிவிடும். பின்னர் அவற்றை விறகுக்குதான் பயன்படுத்த நேரிடும். இதனால் தீக்குச்சி தொழிற்சாலை உரிமையாளர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இதுகுறித்து கோவில்பட்டி தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் கூறுகையில், “நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதால் வெளிமாநிலங்கள், வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்ட ரூ.40 கோடி தீப்பெட்டி பண்டல்கள் லாரிகளிலும், தூத்துக்குடி துறைமுகத்திலும் தேக்கம் அடைந்துள்ளன” என்றனர்.
Tags:    

Similar News