செய்திகள்
பறிமுதல் செய்யப்பட்ட மது பாட்டில்கள்.

திருவோணத்தில் டாஸ்மாக் கடையை திறந்து மதுபாட்டில்களை கொள்ளையடித்த 4 பேர் கைது

Published On 2020-03-30 08:08 GMT   |   Update On 2020-03-30 08:08 GMT
தஞ்சை அருகே திருவோணத்தில் டாஸ்மாக் கடையை திறந்து மதுபாட்டில்களை கொள்ளையடித்த கடையின் ஊழியர்கள் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருவோணம்:

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க ஊரடங்கு உத்தரவானது அமல்படுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைகளான மருந்துக்கடைகள், பால் கடைகள் மட்டுமே 24 மணிநேரமும் திறந்திருக்கும் எனவும் மளிகைகடைகள், காய்கறிக்கடைகள் உள்ளிட்டவை காலை முதல் மதியம் 2.30 மணிவரை மட்டுமே இயங்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில் இந்த ஊரடங்கு உத்தரவால் டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டன. இதனால் தஞ்சை மாவட்டத்தில் பல இடங்களில் சமூக விரோதிகள் பலர் கள்ளத்தனமாக மதுபாட்டில்களை பதுக்கிவைத்து விற்பனை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் பதுக்கிவைத்த அனைத்து மதுபாட்டில்களும் விற்று தீர்ந்ததையடுத்து மீண்டும் மதுபாட்டில்களை வாங்க வழியின்றி சமூக விரோதிகள் தவித்து வந்துள்ளனர். இந்த சூழலை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்து பணம் சம்பாதித்துவிடலாம் என்ற எண்ணத்தில் தஞ்சை மாவட்டம் திருவோணம் அருகே வீரடிப்பட்டியில் உள்ள டாஸ்மாக்கடையில் பணியாற்றும் கண்காணிப்பாளர் அரங்கசாமி, விற்பனையாளர் சவுந்தரராஜன் ஆகியோர் நேற்று இரவு மேலும் 2 பேருடன் வீரடிப்பட்டி டாஸ்மாக்கடைக்கு சென்று கடையை திறந்து மதுபாட்டில்களை பெட்டி பெட்டியாக டாடா ஏசி வாகனத்தில் அவசர அவசரமாக ஏற்றியுள்ளனர்.

இதனை பார்த்த அப்பகுதியை சேர்ந்த சிலர் இதுகுறித்து திருவோணம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அங்கு வந்த சப-இன்ஸ்பெக்டர் டேவிட், தலைமை காவலர் சரவணன் ஆகியோர் அவர்களிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது அவர்களுடன் வந்த 2 பேர் தப்பி ஓடியுள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் வீரராகவன், சவுந்தரராஜன் ஆகியோரிடம் விசாரணை நடத்திய போது அவர்கள் முன்னுக்குபின் முரணாக பேசியுள்ளனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட டாஸ்மாக்கடை மேலாளரை தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் டாஸ்மாக்கடையை திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. எந்த ஊழியருக்கும் டாஸ்மாக்கடையை திறக்க அனுமதி வழங்கப்படவில்லை என தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து அவர்கள் டாஸ்மாக்கடைய கள்ளத்தனமாக திறந்து மதுபாட்டில்களை கொள்ளையடித்தது தெரியவந்தது. அதனை தொடர்ந்து டாஸ்மாக் கடை ஊழியர்கள் வீரராகவன், சவுந்தரராஜன் மற்றும் அவர்களுக்கு துணையாக இருந்த வேன் டிரைவர் சக்திவேல், ரெங்கராஜ் ஆகிய 4 பேரை கைது செய்து அவர்களிடம் இருந்து 699 மதுபாட்டில்கள், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட சரக்கு வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News