செய்திகள்
கேஎஸ் அழகிரி

மத்திய அரசு நிதி ஆதாரத்தை பெருக்கி கொரோனா பாதிப்புக்கு உதவ வேண்டும்- கே.எஸ்.அழகிரி

Published On 2020-03-28 09:15 GMT   |   Update On 2020-03-28 09:15 GMT
மத்திய அரசு நிதி ஆதாரத்தை பெருக்கி கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உதவ வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
சென்னை:

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

மத்திய அரசு அறிவித்துள்ள நிவாரண உதவிகள் தமிழக மக்களுக்கு முழு பயனையும் அளிக்காதது மிகுந்த வேதனையை தருகிறது. தமிழகத்தில் மொத்த குடும்ப அட்டைகள் 2 கோடியே 11 லட்சம்.

இதில் 90 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் விடுபடுகிற நிலை ஏற்பட்டுள்ளது. அதேபோல தமிழக அரசு நடைமுறைப்படுத்துகிற 9 சமூக பாதுகாப்பு திட்டங்களில் பயன்பெறுவோர் 32 லட்சம் பேர். ஆனால் மத்திய பா.ஜனதா அரசு நிறைவேற்றுகிற 3 சமூக நல திட்டங்களால் பயன்பெறுவோர் 20 லட்சம் பேர் மட்டுமே.

இந்த பயனை பெற முடியாத நிலையில் 12 லட்சம் பேர் உள்ளனர். மத்திய அரசின் இத்தகைய பாரபட்சமிக்க அணுகுமுறையினால் எவரும் பாதிக்கப்படாமல் இருக்க தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உரிய நடவடிக்கைகளை எடுக்க மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்.

இன்றைய இக்கட்டான சூழலில் மத்திய பா.ஜனதா அரசுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமைந்திருப்பது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வரலாறு காணாத வகையில் 30 டாலராக வீழ்ச்சி அடைந்துள்ளது.

எனவே மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்து செயல் திட்டங்களை வகுத்து விரைந்து செயல்பட்டு எதிர் கொண்டு வருகிற பேராபத்தில் இருந்து காப்பாற்ற முடியும் என்ற நம்பிக்கையை மக்களுக்கு ஏற்படுத்துவது மிக மிக அவசியமாகும்.

உலகத்தின் வல்லரசாக இருக்கிற 35 கோடி மக்கள் தொகை கொண்ட அமெரிக்கா கொரோனா தாக்குதலில் இருந்து தொழில் முனைவோர் பாதுகாக்க 1.5 டிரில்லியன் டாலர் (நமது ரூபாய் மதிப்பில் 1 கோடியே 7 லட்சத்து 14 ஆயிரத்து 500 கோடி) நிதி ஒதுக்கி உள்ளது.

பிரிட்டன் 900 பில்லியன் டாலரை ஒதுக்கி உள்ளது. ஆனால் நமது பிரதமர் மோடியோ 136 கோடி மக்கள் கொண்ட நம் நாட்டிற்கு வெறும் ரூ.15 ஆயிரம் கோடியை ஒதுக்கி இருப்பது யானை பசிக்கு சோளப் பொறியாகத்தான் இருக்கும் என்பதை தெரிவிக்க விரும்புகிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News