செய்திகள்
கொரோனா வைரஸ்

சேலத்தில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்வு

Published On 2020-03-28 07:13 GMT   |   Update On 2020-03-28 07:13 GMT
இந்தோனேசியா மதபோதகர்களுடன் தொடர்பில் இருந்த முதியவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 - ஆக உயர்ந்தது.
சேலம்:

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதை தடுக்க மத்திய -மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. இந்த நிலையில் இந்தோனேசியா நாட்டில் இருந்து 11 முஸ்லீம் மதபோதகர்கள் கடந்த மாதம் 11-ந் தேதி சேலம் வந்தனர்.

கொரோனா வைரஸ் அறிகுறி இருக்கலாம் என சந்தேகத்தின் பேரில் இவர்கள் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் தனிமை வார்டில் அனுமதிக்கப்பட்டனர். மேலும் இவர்களுக்கு சுற்றுலா வழிக்காட்டியாக வந்த சென்னையை சேர்ந்த ஒருவரும் மற்றும் அவர்களுடன் இணைந்து சுற்றிய 4 பேரும் தனிமை வார்டில் அனுமதிக்கப்பட்டனர். இதில் இந்தோனேசியா நாட்டை சேர்ந்த 4 பேர் மற்றும் சென்னையை சேர்ந்த சுற்றுலா வழிகாட்டி ஒருவருக்கும் என 5 பேருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த நிலையில் இவர்களுடன் தொடர்பில் இருந்த சேலம் சன்னியாசி குண்டு பகுதியை சேர்ந்த 61 வயது முதியவர் ஒருவரும் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ரத்தம் மற்றும் சளி மாதிரி எடுத்து, அங்குள்ள ஆய்வகத்தில் டாக்டர் குழுவினர் பரிசோதனை செய்தனர். இதில் அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து அதனை உறுதி செய்ய சென்னை கிண்டியில் உள்ள அரசு ஆய்வகத்திற்கு ரத்த மாதிரி அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு செய்யப்பட்ட பரிசோதனையிலும், கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு, நேற்று இரவு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இவருடன் சேர்ந்து சேலத்தில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 - ஆக உயர்ந்தது.

இது குறித்து சேலம் மாவட்ட சுகாதார துறை அதிகாரிகள் தெரிவித்ததாவது-

இந்தோனேசியா நாட்டில் இருந்து சேலம் வந்த 11 முஸ்லீம் மதபோதகர்களுடன் தொடர்பில் இருந்த 61 வயது முதியவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் அவர்களுடன் தொடர்பில் இருந்த 136 குடும்பங்களை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். மேலும் உடல் நலம் பாதிக்கப்பட்டால், அவர்கள் தானாக முன்வந்து, உடனடியாக தெரிவிக்க வேண்டும். இதில் கால தாமதம் செய்யக்கூடாது.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News