கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் தற்போது 33 பேர் கொரோனா அறிகுறிகளுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களது ரத்தம், சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி கொரோனா சிறப்பு சிகிச்சை மையமாக மாற்றப்பட்டது. சளி, காய்ச்சல், இருமல் தொண்டை வலி பாதிப்புடன் வருபவர்களுக்கு கொரோனா பாதிப்புகள் உள்ளதா? என பரிசோதனை செய்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அங்கு ஸ்பெயினில் இருந்து கோவை வந்த கல்லூரி மாணவி, திருப்பூரை சேர்ந்த தொழில் அதிபர் என 2 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நேற்று வரை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள், கொரோனா அறிகுறிகளுடன் உள்ளவர்கள் என சேர்த்து 44 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
நேற்று ஒரே நாளில் மட்டும் 13 பேர் காய்ச்சல், சளி, தொண்டைவலி, இருமல் என்று இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் கொரோனா அறிகுறிகளுடன் சிகிச்சைக்காக வந்தனர். அவர்களை டாக்டர்கள் கண்காணித்து சிகிச்சை அளிக்கின்றனர்.
இதற்கிடையே முன்னதாக அனுமதிக்கப்பட்டிருந்த 14 பேரின் ரத்தம், சளி மாதிரிகளை ஆய்விற்காக அனுப்பி இருந்தனர். அதன் முடிவுகள் வந்தன.
அதில் அவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என்பது தெரியவந்து. இதையடுத்து டாக்டர்கள் அவர்களிடம் 14 நாட்கள் வீட்டை விட்டு வெளியில் வர வேண்டாம். தனியாக இருங்கள். காய்ச்சல், இருமல் இருந்தால் எங்களுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் என்று அறிவுரை கூறி அவர்களை வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.
தற்போது இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் 33 பேர் கொரோனா அறிகுறிகளுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களது ரத்தம், சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது.