செய்திகள்
கோப்புப்படம்

கோவை மத்திய சிறையில் இருந்து 136 கைதிகள் பரோலில் விடுதலை

Published On 2020-03-24 10:20 GMT   |   Update On 2020-03-24 10:20 GMT
கொரோனா முன் எச்சரிக்கை நடவடிக்கையாக கோவை மத்திய சிறையில் இருந்து 136 கைதிகள் பரோலில் விடுதலை செய்யப்பட்டனர்.
கோவை:

மத்திய சிறைச்சாலைகளில் கொரோனா வைரஸ் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் விசாரணை கைதிகளை பரோலில் விடுதலை செய்ய சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இதனையடுத்து தமிழகத்தில் சிறையில் உள்ள விசாரணை கைதிகள் நேற்று இரவு பரோலில் விடுதலை செய்யப்பட்டனர்.

கோவை மத்திய சிறையில் 700 தண்டனை கைதிகள், 600 விசாரணை கைதிகள் உள்பட மொத்தம் 1300 கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர்.

இதில் வழிப்பறி, அடிதடி உள்பட சிறிய குற்றங்களில் ஈடுபட்ட 5 பெண் கைதிகள் உள்பட மொத்தம் 136 விசாரணை கைதிகள் நேற்று இரவு 11.45 மணிக்கு பரோலில் விடுதலை செய்யப்பட்டனர்.

இது குறித்து ஜெயில் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் கூறியதாவது:-

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவையடுத்து விசாரணை கைதிகளை பரோலில் விடுதலை செய்வது குறித்து நேற்று ஆய்வு நடத்தப்பட்டது. இதில் சிறிய குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட 5 பெண் கைதிகள் உள்பட 136 கைதிகளை விடுதலை செய்வது என முடிவு செய்யப்பட்டது. அவர்கள் நேற்று இரவு 11.45 மணிக்கு பரோலில் விடுதலை செய்யப்பட்டனர். கோவை மத்திய சிறையில் உள்ள கைதிகளுக்கு கொரோனா வைரஸ் பரவும் முறை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் சிறைக்கு புதிதாக வரும் கைதிகள் பரிசோதனை செய்யப்பட்ட பின்னரே சிறைக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.

கைதிகளை பரிசோதனை செய்ய 2 வார்டுகள் திறக்கப்பட்டு உள்ளது. தினசரி மருத்துவ குழுவினர் கைதிகளை பரிசோதனை செய்து கண்காணித்து வருகின்றனர். மேலும் சிறையில் 8 இடங்களில் சோப்பு போட்டு கைகழுவும் வசதி செய்யப்பட்டு உள்ளது. சிறை முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இது வரை கோவை மத்திய சிறையில் உள்ள எந்த ஒரு கைதிக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை. தற்போது கோவை மத்திய சிறையில் அரசு ஆஸ்பத்திரிகளுக்கு வழங்குவதற்காக முககவசம் தயாரிக்கும் பணியில் கைதிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News