செய்திகள்
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று பக்தர்கள் கூட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது

மீனாட்சி அம்மன்-ராமேசுவரம் கோவில்களில் தரிசனம் நிறுத்தம்

Published On 2020-03-20 05:26 GMT   |   Update On 2020-03-20 05:26 GMT
மதுரை மீனாட்சி அம்மன் கோவில், கூடலழகர் பெருமாள் கோவில்களில் இன்று முதல் பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மதுரை:

சீனாவின் வுகான் நகரில் இருந்து தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் முழுவதும் பரவி வருகிறது. நாளுக்கு நாள் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றை தடுக்க பெரிய கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகளில் மக்கள் கூடுவதை தவிர்க்க வருகிற 31-ந்தேதி வரை வழிபாடுகளை தற்காலிகமாக நிறுத்த வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

மதுரையில் பிரசித்தி பெற்ற மீனாட்சி அம்மன் கோவிலில் நாள்தோறும் அதிகாலை முதல் இரவு வரை பல்வேறு கால பூஜைகள் நடைபெற்று வருகின்றன. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்வார்கள்.

உள்ளூர் பக்தர்கள் தவிர வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வருகைபுரிந்து தரிசனம் செய்வார்கள். கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை காரணமாக மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று முதல் பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டது.

கோவில் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு பக்தர்கள் இன்றி ஆகம விதிகளின்படி அனைத்து காலபூஜைகள் நடந்தன. பூஜைகள் நடந்தாலும் அவற்றை வழிபட முடியாமல் கோவிலுக்கு வந்த பக்தர்கள் ஏமாற்றத்துடன் தவித்தனர். இதன் காரணமாக பக்தர்கள் அம்மன் சன்னதி வாசலில் நின்றவாறு சுவாமியை தரிசனம் செய்தனர்.

ராமேசுவரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ராமநாதசுவாமி கோவிலில் பக்தர்கள் கடலில் புனித நீராடி வழிபாடு செய்வார்கள். இந்த கோவிலிலும் பக்தர்கள் தரிசனம் நிறுத்தப்பட்டதால் ஏமாற்றம் அடைந்தனர். அவர்கள் கோவில் நுழைவு வாயிலில் விளக்கு ஏற்றி வழிபட்டனர்.

மதுரை அழகர்கோவில், கூடலழகர் பெருமாள் கோவில், இருக்கன்குடி மாரியம்மன் போன்ற பக்தர்கள் அதிகம் கூடும் கோவில்களில் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

வருகிற 31-ந்தேதி வரை இந்த நிலை நீடிக்கும் என்பதால் பக்தர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர்.

மதுரை மாவட்டம் பேரையூர் அருகே பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு மாதந்தோறும் அமாவாசை, பவுர்ணமி நாட்களில் மட்டும் பக்தர்கள் கோவிலுக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.

இந்த நிலையில் அமாவாசையை முன்னிட்டு நாளை 21-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை 4 நாட்கள் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட வேண்டும். ஆனால் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக அமாவாசைக்கு சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு பக்தர்கள் செல்ல மறுஅறிவிப்பு வரும்வரை தடை விதிப்பதாக வனத்துறை மற்றும் கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய 4 இடங்களில் 6-ம் கட்ட அகழாய்வு பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. கொந்தகையில் 3 குழிகள் தோண்டப்பட்டு வருகின்றன. அகரத்தில் 2 ஏக்கர் அரசு நிலத்தில் அகழாய்வு பணிக்காக சுத்தப்படுத்தும் பணி நடந்து வருகிறது.

கீழடியில் நீதியம்மாள் என்பவரது நிலத்தில் 3 குழிகள் தோண்டப்பட்டு வருகின்றன. இங்கு செங்கல் சுவர்கள் இரண்டும், சிறிய அளவிலான மண் பானைகளும் கண்டறியப்பட்டுள்ளன. இதுவரை கிடைத்த பானைகளிலேயே பெரிய பானை ஒன்று சமீபத்தில் கண்டறியப்பட்டது.

கொரோனா வைரஸ் பரவி வருவதால் வருகிற 31-ந்தேதி வரை கீழடி அகழாய்வை பார்வையிட சுற்றுலா பயணிகள் வரவேண்டாம் என்று பஞ்சாயத்து தலைவர் வெங்கடசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.


மதுரை கூடலழகர் பெருமாள் கோவிலில் இன்று நடை அடைக்கப்பட்டு இருந்தது.
Tags:    

Similar News