செய்திகள்
முல்லைப்பெரியாறு அணை

முல்லைப்பெரியாற்றில் தண்ணீர் திருடிய 13 மின் மோட்டார்கள் பறிமுதல்

Published On 2020-03-13 09:25 GMT   |   Update On 2020-03-13 09:25 GMT
பெரியாறு அணையில் இருந்து தமிழகப்பகுதிக்கு குடிநீருக்காக திறக்கப்படும் தண்ணீரை திருட பயன்படுத்திய 13 மோட்டார்களை பறிமுதல் செய்த பொதுப்பணித்துறையினர் இணைப்பு குழாய்களையும் வெட்டி அழித்தனர்.
கம்பம்:

முல்லைப்பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால், அணையின் நீர்மட்டம் தற்போது 115.35 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்தும் இல்லை. இதனால் கடந்த சில வாரங்களாக அணையிலிருந்து தமிழகப்பகுதிக்காக குடிநீருக்காக மட்டும் வினாடிக்கு 100 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

குடிநீருக்காக ஆற்றில் திறக்கப்பட்ட தண்ணீரை கம்பம் பள்ளத்தாக்கு பெரியாற்று படுகையில் சிலர் மோட்டார் வைத்து திருடுவதால் தண்ணீர் எல்லைக்குச் செல்லவில்லை. இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.

இதையடுத்து தேனி கலெக்டர் பல்லவி பல்தேவ் உத்தரவின் பேரில் பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் தண்ணீர் திருடும் இணைப்பு குழாய்களை துண்டித்தும், மோட்டார்களை பறிமுதல் செய்தும் வருகின்றனர்.

பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் கதிரேஷ்குமார் தலைமையில், பொதுப்பணித்துறை மற்றும் வருவாய்த்துறையினர் கடந்த இரண்டு நாட்களில் சுருளிப்பட்டி, கம்பம், காமயகவுண்டன்பட்டி, அணைப்பட்டி உள்ளிட்ட பெரியாற்று படுகை பகுதிகளில் சோதனை மேற்கொண்டனர்.

இச்சோதனையில் முல்லைப்பெரியாற்றில் தண்ணீரை திருட பயன்படுத்திய 13 மோட்டார்களை பறிமுதல் செய்தனர். மேலும் இணைப்பு குழாய்களை வெட்டி அழித்தனர். இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், பெரியாற்று படுகையில் தண்ணீர் திருட்டில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

Tags:    

Similar News