செய்திகள்
கோப்பு படம்

தமிழகத்தில் குடியுரிமை சட்ட எதிர்ப்பாளர்கள் மீண்டும் தீவிர போராட்டம் - மத்திய உளவுத்துறை எச்சரிக்கை

Published On 2020-03-13 07:13 GMT   |   Update On 2020-03-13 07:13 GMT
தமிழகத்தில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக மீண்டும் தீவிர போராட்டம் நடைபெற வாய்ப்பு உள்ளதாக மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னை:

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடந்து வருகிறது.

தமிழ்நாட்டிலும் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்டம் பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது. சென்னை வண்ணாரப்பேட்டையில் 29-வது நாளாக போராட்டம் நடக்கிறது.

சமீபத்தில் டெல்லியில் நடந்த போராட்டத்தின் போது ஏற்பட்ட வன்முறையில் பலர் கொல்லப்பட்டனர். ஏராளமானோர் காயம் அடைந்தனர். சில தினங்களுக்கு முன்பு கோவையில் இரு தரப்பினர் மோதிக்கொண்டனர். இதனால் அங்கு பதட்டமான நிலை உள்ளது.

இதையடுத்து, குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு போராட்டத்தால் தமிழ்நாட்டில் எந்தவித பாதிப்பும் வந்து விடக்கூடாது என்பதில் தமிழக போலீசார் எச்சரிக்கையாக உள்ளனர். இதனை கண்காணிக்க தமிழக போலீஸ் டி.ஜி.பி. திரிபாதி இதற்கான கூடுதல் டி.ஜி.பி.க்களாக ஜெயந்த் முரளி, சங்கர் ஜெய்வால், சைலேஷ்குமார் யாதவ், மகேஷ்குமார் அகர்வால் ஆகியோரை நியமித்துள்ளார்.

இவர்கள் கோவை, திருப்பூர், திருச்சி, நெல்லை மாவட்டங்களின் கூடுதல் கண்காணிப்பு பணியை ஏற்றுள்ளனர். இதையடுத்து, இந்த மாவட்டங்களில நடைபெறும் போராட்டங்களால் எந்தவித பிரச்சினையும் ஏற்படாமல் இருக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து முடிவெடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு போராட்டம் தமிழகத்தில் தீவிரம் அடையலாம். இதில் தீவிரவாத அமைப்புகள் ஊடுருவலாம். இதனால் விபரீதங்கள் நடைபெற வாய்ப்புகள் உள்ளன என்று மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதையடுத்து, போராட்டம் தீவிரமாகாமல் தடுக்க தமிழக காவல் துறை கூடுதல் அக்கறையுடன் செயல்பட வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமி‌ஷனர் ஈஸ்வரமூர்த்தி தற்போது உள்நாட்டு பாதுகாப்பு ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து தமிழ்நாட்டில் போலீஸ் கண்காணிப்பு தீவிரமாக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் குடியுரிமை சட்டத்துக்கு எதிரான போராட்டம் நடத்த பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அரசு கட்டிடங்கள் அருகே போராட்டம் நடத்த அனுமதி வழங்க கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வேறு சில கட்டுப்பாடுகளும் விதிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
Tags:    

Similar News