செய்திகள்
பள்ளி மாணவிகள்

பள்ளிகளுக்கு அடுத்த மாதம் 21-ந்தேதி முதல் விடுமுறை

Published On 2020-03-13 04:03 GMT   |   Update On 2020-03-13 07:37 GMT
ஆண்டு இறுதித் தேர்வு முடிந்ததும், தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு அடுத்த மாதம்(ஏப்ரல்) 21-ந்தேதி முதல் விடுமுறை விடப்படும் என்று பள்ளிக்கல்வி துறை தெரிவித்துள்ளது.
சென்னை:

பிளஸ்-2 வகுப்புக்கான பொதுத்தேர்வு கடந்த 2-ந்தேதி தொடங்கியது. இந்த தேர்வு வருகிற 24-ந்தேதியுடன் நிறைவு பெற உள்ளது. பிளஸ்-1 வகுப்பு மாணவர்களுக்கு கடந்த 4-ந்தேதி தேர்வு தொடங்கிவிட்டது. அவர்களுக்கு 26-ந்தேதியுடன் தேர்வு முடிவடைகிறது. அதேபோல், எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்களுக்கு பொதுத்தேர்வு வருகிற 27-ந்தேதி தொடங்க உள்ளது.

அதன் தொடர்ச்சியாக 1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ஆண்டு இறுதித் தேர்வு மற்றும் மூன்றாம் பருவத் தேர்வு நடைபெற உள்ளது. இதில் 6, 7, 8 மற்றும் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு வருகிற 30-ந்தேதி முதல் தேர்வு தொடங்குகிறது.

இதேபோல், 1, 2, 3, 4 மற்றும் 5-ம் வகுப்புகளுக்கான தேர்வு அடுத்த மாதம் (ஏப்ரல்) 1-ந் தேதி தொடங்க உள்ளது. இவர்களுக்கான தேர்வு அடுத்த மாதம் 20-ந்தேதிக்குள் முடிந்துவிடும்.



இந்த இறுதி தேர்வுகளுக்கு மாணவர்களை தயார்படுத்தும் வகையில் பாடங்களை விரைந்து நடத்தி முடிக்கவும், தேர்வுகளை அச்சமின்றி எதிர்கொள்ள வேண்டும் என்று அறிவுரை வழங்கவும் ஆசிரியர்களுக்கு கல்வித்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

இறுதித் தேர்வு முடிந்த மறுநாளில் இருந்து, அதாவது அடுத்த மாதம் 21-ந்தேதி முதல் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படும் என்று கல்வித்துறை தெரிவித்து இருக்கிறது.

இதுதொடர்பாக பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பனிடம் கேட்டபோது, ‘ஒவ்வொரு ஆண்டும் பள்ளி வேலைநாட்கள் குறித்த அட்டவணை வெளியிடப்படும். அதில் உள்ள அட்டவணைப்படி, அடுத்த மாதம் (ஏப்ரல்) 21-ந்தேதி முதல் பள்ளிகளுக்கு விடுமுறைதான். அதில் மாற்றம் இருக்க வாய்ப்பு இல்லை’ என்றார். 
Tags:    

Similar News