செய்திகள்
கே.எஸ்.அழகிரி

யெஸ் வங்கி நிறுவனர் கைது தும்பைவிட்டு வாலை பிடிக்கும் கதை- கே.எஸ்.அழகிரி

Published On 2020-03-10 04:51 GMT   |   Update On 2020-03-10 04:51 GMT
யெஸ் வங்கியின் நிறுவனர் ராணா கபூர் கைது செய்யப்பட்டிருப்பது தும்பை விட்டு வாலை பிடிக்கிற கதையாக இருக்கிறது என்று கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.
சென்னை:

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

நரேந்திர மோடி ஆட்சியின் தொடக்கத்திலிருந்தே வங்கிக் கொள்ளைகள் தொடர் கதையாக நிகழ்ந்து வருகின்றன. மோடியின் முதல் ஐந்தாண்டுகால ஆட்சியில் 90 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு வங்கியை ஏமாற்றும் 19 ஆயிரம் வழக்குகள் தொடுக்கப்பட்டன.

53 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு ஏமாற்றிய 23 நபர்கள் வெளிநாடுகளுக்கு தப்பித்துப் போகவும் அனுமதித்துள்ளனர். நரேந்திர மோடிக்கு நெருக்கமான குஜராத்தைச் சேர்ந்த வைர வியாபாரிகளான நிரவ் மோடியும், அவரது உறவினர் மெகுல் சோஷியும் சுமார் 26,306 கோடி ரூபாயை ஏமாற்றி விட்டு வெளிநாடுகளுக்கு ஓடிப் போனார்கள்.

2019-ம் ஆண்டு நிலவரப்படி, பொதுத்துறை நிறுவனங்களின் வராக் கடன் ரூபாய் 10 லட்சத்து 50 ஆயிரம் கோடியை எட்டியுள்ளது. இதனால், பொதுத்துறை நிறுவனங்களின் அடிப்படையை சிதைக்கிற நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் ‘யெஸ்” வங்கி விவகாரம் இந்திய நிதி சேவைத்துறையின் அடித்தளத்தையே தகர்த்துள்ளது.

யெஸ் வங்கியின் செயல்பாடுகள் தள்ளாடுவதை முன்னரே கவனித்து உரிய கட்டுப்பாடுகளை விதிக்காமல் இந்திய ரிசர்வ் வங்கியும், நிதியமைச்சகமும் படுதோல்வி அடைந்துள்ளது. இந்தப் பின்னணியில் தான் முன்னெச்சரிக்கையாக திருப்பதி தேவஸ்தானம் யெஸ் வங்கியிலிருந்து தனது முதலீட்டை எடுத்துக்கொண் டது.

யெஸ் வங்கியில் ஏற்பட்ட பிரச்சனை இன்றைக்கு, நேற்று ஏற்பட்டதல்ல. கடந்த மார்ச் 2014-ம் ஆண்டில் யெஸ் வங்கி வழங்கிய மொத்த கடன் ரூபாய் 55 ஆயிரத்து 633 கோடி தான். ஆனால், அது திடீரென கடந்த மார்ச் 2019-ல் ரூபாய் 2 லட்சத்து 41 ஆயிரத்து 499 கோடியாக உயர்ந்திருக்கிறது. மோடியின் ஆட்சியில் 5 ஆண்டுகளில் இரண்டு லட்சம் கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டது ஏன்?

இந்தக் கடன் உயர்வுக்கு பின்னால் பா.ஜ.க.வின் நிதியமைச்சகம் இருப்பதாக பரவலான சந்தேகம் எழுப்பப்பட்டு வருகிறது. இவை தீவிர பாரபட்சமற்ற விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். யெஸ் வங்கியின் நிறுவனர் ராணா கபூர் கைது செய்யப்பட்டிருப்பது தும்பை விட்டு வாலை பிடிக்கிற கதையாக இருக்கிறது.

தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் செய்யப்பட்ட முதலீடுகள் மக்களின் சொத்து. மக்கள் தங்கள் முதலீடுகளை பாதுகாப்பாக வைப்புத் தொகையாக வங்கிகளில் வைத்திருந்தனர். அந்த நம்பிக்கை தற்போது தகர்க்கப்பட்டு வருகிறது. மீண்டும் நம்பிக்கையை ஏற்படுத்துகிற வகையில் மத்திய பா.ஜ.க. அரசிடம் என்ன செயல்திட்டம் இருக்கிறது?

மக்களின் நம்பிக்கையை மீண்டும் பெறுகிற வகையில் மத்திய பா.ஜ.க. அரசு தீவிரமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்றால், இந்திய பொருளாதாரம் அதல பாதாளத்தில் வீழ்வதில் இருந்து எவராலும் காப்பாற்ற முடியாது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News