செய்திகள்
கீழ்ப்பாக்கத்தில் உள்ள வீட்டில் க.அன்பழகன் உடல் வைக்கப்பட்டிருந்த போது எடுத்த படம்.

அன்பழகன் மரணம்- தலைவர்கள் இரங்கல்

Published On 2020-03-07 07:52 GMT   |   Update On 2020-03-07 07:52 GMT
தி.மு.க. பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் வயதுமுதிர்வு காரணமாக இன்று காலமானார். அவரது மறைவுக்கு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
சென்னை:

தி.மு.க. பொதுச்செயலாளர் அன்பழகன் மறைவுக்கு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். அதன் விவரம் வருமாறு:-

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ:-

தி.மு.க.வின் பொதுச்செயலாளர் ஆருயிர் அண்ணன் பேராசிரியர் மறைந்தார் என்ற செய்தி, உச்சந்தலையில் விழுந்த பேரிடியாய்த் தாக்கியது.

தளபதி ஸ்டாலினை ஊக்குவித்து, அவரது தலைமையையும் மதித்து ஏற்றுக்கொண்டு, தன் உயிரினும் மேலான திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பாதுகாத்த, பண்புடைச் செம்மல், 100 அகவையைக் கடந்து வாழ்வார் என்று நம்பி இருந்த நேரத்தில், நம்மை விட்டுப் பிரிந்து விட்டார்.

பொதுவாழ்க்கையில், அரசியலில், நிறைவாழ்வு வாழ்ந்த இனமானப் பேராசிரியரின் பெயரும் புகழும், எந்நாளும் நிலைத்து இருக்கும். பொங்கி வரும் கண்ணீருடன், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன். அவருக்கு இரங்கல் தெரிவிக்கின்ற முகமாக,

இன்றுமுதல் அடுத்த மூன்று நாள்கள், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகக் கொடிகள், அரைக்கம்பத்தில் பறக்க விடப்படும்.

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி:-

திராவிட முன்னேற்றக் கழகத்தில் 1977 முதல் 43 ஆண்டுகள் தொடர்ந்து பொதுச்செயலாளராகவும், 9 முறை சட்டமன்ற உறுப்பினராகவும், ஒருமுறை பாராளுமன்ற உறுப்பினராகவும், தி.மு.க. அமைச்சரவையில் மக்கள் நல்வாழ்வு, நிதி, கல்வி போன்ற துறைகளை ஏற்று மிகச்சிறப்பாக பணியாற்றிய பெருந்தகையாளர் பேராசிரியர்.

தி.மு.கழகத்தின் முதுபெரும் தலைவர் பேராசிரியரின் மறைவிற்கு தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாகவும், தனிப்பட்ட முறையிலும் எனது ஆழ்ந்த இரங்கலை அவரது குடும்பத்தினருக்கும் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட அவரது கட்சியினருக்கும் எனது அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்:-

இந்திய நாடு மதவெறி சக்திகளின் ஆட்சியின் கீழ் மதசார்பின்மை மாநில மற்றும் மொழி உரிமைகள் மீது தாக்குதலுக்கு உள்ளாகும் சூழ்நிலையில், இக்கொள்கைகளில் ஆழ்ந்த பிடிப்பு கொண்ட பேராசிரியர் க. அன்பழகன் மறைவு ஈடு செய்ய முடியாததாகும்.

அவரது மறைவால் துயருற்றிருக்கும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கும், அன்னாரது குடும்பத்தாருக்கும், திமுக தொண்டர்களுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு தனது ஆழ்ந்த அனுதாபத்தையும், வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன்:-

திராவிட இயக்கத்தின் மூத்த தலைவரும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளருமான பேராசிரியர் க.அன்பழகன் மறைவெய்திய செய்தி கேட்டு பேரதிர்ச்சியடைந்தேன். கண்ணியமான அரசியலுக்கு இலக்கணமாகத் திகழ்ந்த இனமானப் பேராசிரியர் மொழி, இன நலன் காக்கும் போராட்டங்களில் எப்போதும் முன்னிலை வகித்தவர்.

அவருடைய மறைவு தமிழ்ச் சமூகத்திற்கு ஈடுசெய்ய முடியாத மாபெரும் இழப்பு. அவருக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் எமது செம்மாந்த வீரவணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன்:-

திராவிட இயக்கத் தலைவர்களில் முன்னோடியும் தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவருமான திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் பேராசிரியர் க. அன்பழகனின் மறைவு மிகுந்த வருத்தம் அளிக்கிறது. இளமைப் பருவம் முதல் திராவிடக் கொள்கைகள் மீது ஈடுபாடு கொண்டு கடைபிடித்து, ஆர்வமாக செயல்பட்டு வந்தவர்.

அனைத்து அரசியல் கட்சியினராலும் அன்பு பாராட்டப்பட்டவர். குறிப்பாக மறைந்த மக்கள் தலைவர் ஐயா ஜி.கே. மூப்பனாரோடு மரியாதை கலந்த பாசத்தோடு பழகியதை நினைவு கூறுகிறேன்.

அன்னாரது மறைவு தமிழகத்திற்கும், தி.மு.க.வுக்கும் பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் தி.மு.க.வினருக்கும், குடும்பத்தாருக்கும் த.மா.கா சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.

பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ்:-

தமிழ்நாட்டின் மிக மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரான பேராசிரியர் க. அன்பழகன் கட்சியிலும், ஆட்சியிலும் தாம் வகித்த பதவிகளுக்கு பெருமை சேர்த்தவர் பேராசிரியர் . திமுகவில் இருந்தாலும் அரசியல் எல்லைகளைக் கடந்து அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்தவர்களாலும் நேசிக்கப்பட்டவர்; மதிக்கப்பட்டவர்.

அரசியலில் அதிசயங்களாக திகழ்ந்தவர்கள் வெகு சிலரே. அவர்களில் குறிப்பிடத்தக்கவர் பேராசிரியர் க.அன்பழகனார். அவரது மறைவு அவரது குடும்பத்திற்கும், திமுகவுக்கும் பேரிழப்பாகும்.

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் டுவிட்டரில் கூறி இருப்பதாவது:-

தமிழகத்தின் முதுபெரும் தலைவர், திராவிட சிந்தனையின் தெளிவுரை, ஏற்றுக்கொண்ட இயக்கத்தில் இறுதிவரை உறுதியோடு இருந்தவர், பேராசிரியர் அன்பழகனின் இழப்பு வேதனைக்குரியது.

அவர் குடும்பத்தாருக்கும் அவரது இயக்கத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.

தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் எம்.பி., பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, இந்திய ஜனநாயக கட்சி தலைவர் பாரிவேந்தர் எம்.பி., அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழக தலைவர் சேதுராமன், வி.ஐ.டி. துணைத் தலைவர் ஜி.வி.செல்வம், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன், சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன், எஸ்.டி.பி.ஐ. கட்சி தலைவர் நெல்லை முபாரக், திராவிட மனித சங்கிலி நிறுவனர் செங்கை பத்மநாபன், தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர் நலச்சங்க தலைவர் பொன்னுசாமி, தமிழ்நாடு முஸ்லிம் லீக் கட்சி தலைவர் முஸ்தபா ஆகியோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
Tags:    

Similar News