செய்திகள்
மாணவர்கள்

போக்குவரத்து விதிமீறலுக்கு நூதன தண்டனை- இலக்கண பிழையின்றி எழுத முடியாமல் தவித்த மாணவர்கள்

Published On 2020-03-07 04:17 GMT   |   Update On 2020-03-07 04:17 GMT
மோட்டார் சைக்கிளில் தாறுமாறாக சென்ற கல்லூரி மாணவர்களுக்கு போலீசார் நூதன தண்டனை அளித்தனர். அதன்படி மாணவர்கள், இலக்கண பிழையின்றி கடிதம் எழுத முடியாமல் தவித்தனர்.
கோவை:

கோவையை அடுத்த சூலூர் முத்துக்கவுண்டன்புதூர் சாலையில் நேற்று ஒரே மோட்டார் சைக்கிளில் 3 வாலிபர்கள், சினிமா பாடல்களை பாடிக்கொண்டும், செல்போனில் பேசியபடியும் தாறுமாறாக சென்றனர். அவர்களை மற்ற வாகன ஓட்டிகள் சுமார் 2 கி.மீ. துரத்திச்சென்று மடக்கி பிடித்து சூலூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

விசாரணையில், அவர்கள் 3 பேரும் திருப்பூரை சோ்ந்தவர்கள் என்பதும், சூலூரில் உள்ள தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு பி.பி.ஏ. படித்து வருவதும் தெரியவந்தது. அவர்களின் எதிர்காலம் கருதி போலீசார் வழக்குப்பதிவு செய்யவில்லை.

இதைத்தொடா்ந்து, வேகமாக சென்றதற்கு மன்னிப்பு கேட்டும், இனிமேல் மோட்டார் சைக்கிளில் இது போல் வேகமாக செல்ல மாட்டோம் என்றும் ஆங்கிலத்திலும், தமிழிலும் கடிதம் எழுத வேண்டும் என்று போலீசார் நூதன தண்டனை கொடுத்தனர். அவர்கள் எழுதி கொடுத்த கடிதத்தை பார்த்து போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். அந்த கடிதத்தில் அதிக எழுத்து பிழையும், இலக்கண பிழையும் இருந்தது.

எனவே இலக்கண பிழையின்றி கடிதம் எழுதி கொடுக்குமாறு போலீசார் அறிவுறுத்தினர். அந்த மாணவர்கள் சுமார் ஒரு மணி நேரமாக கடிதம் எழுதினர். ஆனால் கடைசி வரை சரியாக கடிதம் எழுத முடியாததால் மன்னிப்பு கேட்டனர். இதனால் கல்லூரி மாணவர்கள் 3 பேரையும் போலீசார் அனுப்பி வைத்தனர்.
Tags:    

Similar News