செய்திகள்
கோப்புப்படம்

வண்ணாரப்பேட்டை-விம்கோ நகர் மெட்ரோ வழித்தடத்துக்கு 10 புதிய ரெயில்கள்

Published On 2020-03-06 05:08 GMT   |   Update On 2020-03-06 05:08 GMT
வண்ணாரப்பேட்டை - விம்கோ நகர் மெட்ரோ ரெயில் வழித்தடத்தில் இயக்குவதற்காக 10 புதிய மெட்ரோ ரெயில்கள் ஆந்திர மாநிலம் ஸ்ரீசிட்டியில் இருந்து சென்னைக்கு கொண்டு வரப்பட்டது.
சென்னை:

சென்னை மாநகர போக்குவரத்து நெருக்கடியை குறைப்பதற்காக மெட்ரோ ரெயில் திட்டம் உருவாக்கப்பட்டது. முதல் கட்டமாக வண்ணாரப்பேட்டை- விமான நிலையத்துக்கு வழித்தட பாதை அமைக்கப்பட்டு மெட்ரோ ரெயில் பயணிகள் சேவை நடந்து வருகிறது.

பயணிகள், பொதுமக்கள் வரவேற்பை தொடர்ந்து வண்ணாரப்பேட்டை- திருவொற்றியூர் விம்கோ நகர் வரை மெட்ரோ ரெயில் வழித்தட பாதை நீட்டிக்கப்பட்டது.

இதையொட்டி வருகிற ஜூன் மாதம் முதல் இந்த வழித்தட பாதையில் மெட்ரோ ரெயில் சேவை தொடங்கப்பட உள்ளது.

வண்ணாரப்பேட்டை- விம்கோ நகர் வழித்தடத்தில் இயக்குவதற்காக ஆந்திர மாநிலம் ஸ்ரீசிட்டியில் ரூ.200 கோடி செலவில் புதிய ரெயில்கள் தயாரிக்கப்பட்ட 10 புதிய ரெயில்கள் சென்னை கொண்டு வரப்பட்டது.

கோயம்பேடு பணிமனையில் இந்த புதிய ரெயில்கள் நிறுத்தி வைக்கப்பட்டு பல்வேறு ஆய்வு பணிகள் நடந்து வருகிறது. புதிய தண்டவாள பாதையில் இயக்குவதற்கு ‘பிரேக்’ சோதனைகள், தண்ணீர் லீக் சோதனைகள், மெதுவான, அதிவேக இயக்க பரிசோதனைகள் ஆகியவை நடைபெற்று வருகின்றன.

இந்த ஆய்வு பரிசோதனைகள் முடிவடைந்ததும் புதிய ரெயில்கள் ஜூன் மாதம் முதல் வண்ணாரப்பேட்டை- விம்கோ நகர் வழித்தடத்தில் இயக்கப்படுகிறது.

சென்னையில் பஸ், மின்சார ரெயில், மெட்ரோ ரெயில் ஆகியவற்றில் பயணம் செய்ய ஒரே டிக்கெட் வழங்கும் வகையிலான திட்டம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

உலக வங்கி, தெற்கு ரெயில்வே, சென்னை மெட்ரோ ரெயில், சென்னை மாநகர போக்குவரத்து கழகம் ஆகியவற்றின் அதிகாரிகள் இதில் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் உலக வங்கி ஒத்துழைப்புடன் ஒரே ‘ஸ்மார்ட் அட்டை’ மூலம் பஸ், மின்சார ரெயில், மெட்ரோ ரெயில்களில் பயணிக்கும் வகையில் திட்டம் பற்றி அதிகாரிகள் கருத்துக்களை எடுத்து கூறினார்கள். இதை விரைவில் நடைமுறைப்படுத்த ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
Tags:    

Similar News