செய்திகள்
மருத்துவமனையில் உள்ள கம்யூட்டரில் அதிகாரி ஆய்வு செய்த காட்சி.

கோவில்பட்டி ஆர்த்தி மருத்துவமனையில் வருமானவரி துறையினர் விடிய, விடிய சோதனை

Published On 2020-03-04 04:52 GMT   |   Update On 2020-03-04 04:52 GMT
கோவில்பட்டியில் ஆர்த்தி மருத்துவமனையில் விடிய விடிய சுமார் 17 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற வருமான வரி சோதனையினால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவில்பட்டி:

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அண்ணா பஸ்நிலையம் அருகே ஆர்த்தி மருத்துவமனை உள்ளது. இதன் நிர்வாக இயக்குனராக கோவிந்தராஜன் உள்ளார். இவரது மனைவி கோமதி, டாக்டர். இங்கு கோமதி தலைமையில் பல்வேறு மருத்துவ நிபுணர்கள் பணியாற்றி வருகின்றனர். இதில் உள்நோயாளிகள் மற்றும் வெளிநோயாளிகள் பிரிவு செயல்பட்டு வருகிறது. கோவில்பட்டியில் ஆர்த்தி மருத்துவமனைக்கு உட்பட்ட ஆர்த்தி ஸ்கேன் மையம் மற்றும் ஆர்த்தி திருமண மண்டபம் ஆகியவை இயங்கி வருகின்றன. மேலும் சென்னை, மதுரை, நெல்லை, உள்ளிட்ட பல்வேறு முக்கிய நகரங்களில் ஆர்த்தி ஸ்கேன் மையங்கள் செயல்பட்டு வருகின்றன.

இந்நிலையில் நேற்று மதியம் வருமான வரித்துறை அதிகாரிகள் 19 பேர் கொண்ட குழுவினர் 3 கார்களில் ஆர்த்தி மருத்துவமனைக்கு வந்தனர். அவர்கள் பல குழுக்களாகப் பிரிந்து ஆர்த்தி மருத்துவமனைகள், ஸ்கேன் மையம், திருமண மண்டபம், ரத்த வங்கி ஆகியவற்றில் சோதனை நடத்தினர். மேலும் அங்குள்ள ஆவணங்களின் அடிப்படையில் ஊழியர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.

மருத்துவமனை, ஸ்கேன் மையத்தில் பணியாற்றிய ஊழியர்களை வெளியில் செல்வதற்கு அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. அவர்களுக்கு வெளியில் உள்ள ஓட்டலில் இருந்து சாப்பாடு வாங்கி வந்து வழங்கினர். எனினும் அங்கு நோயாளிகள் வழக்கம்போல் சிகிச்சைக்கு வந்து செல்லவும் அதிகாரிகள் அனுமதித்தனர். ஸ்கேன் மையமும் வழக்கம்போல் இயங்கியது.

நேற்று மாலை தொடங்கிய வருமானவரி சோதனை இரவை தாண்டியும் விடிய, விடிய நடைபெற்றது. இதில் நிர்வாக இயக்குனர் கோவிந்தராஜன், அவரது மனைவி டாக்டர் கோமதி ஆகியோரிடம் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தினர். பின்னர் இன்று காலை 6 மணிக்கு சோதனை நிறைவு பெற்றது. இந்தச் சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. எனினும் அதிகாரிகள் இது பற்றி கூற மறுத்துவிட்டனர். ஆர்த்தி மருத்துவமனையில் விடிய விடிய சுமார் 17 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற இந்த வருமான வரி சோதனையினால் கோவில்பட்டியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News