செய்திகள்
சென்னை ஐகோர்ட்

நிர்பயா நிதியை முறையாக பயன்படுத்தாது ஏன்?- தமிழக அரசுக்கு ஐகோர்ட் கேள்வி

Published On 2020-03-03 07:56 GMT   |   Update On 2020-03-03 07:56 GMT
மத்திய அரசின் நிர்பயா நிதியை ஏன் முறையாக பயன்படுத்தவில்லை? என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
சென்னை:

டெல்லியில் கடந்த 2012-ம் ஆண்டு நிர்பயா என்ற பெண் ஓடும் பஸ்சில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.

அவரை பாலியல் பலாத்காரம் செய்த கும்பல், அவரை கொடூரமாக தாக்கி சாலையில் வீசிச் சென்றது. இதில் படுகாயமடைந்த அந்த இளம்பெண் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையடுத்து நாட்டில் உள்ள பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதமாக நிர்பயா நிதியம் என்ற நிதியை மத்திய அரசு உருவாக்கியது. முதல்கட்டமாக ரூ.10 ஆயிரம் கோடியை ஒதுக்கியது.

இந்த நிதியை தமிழக அரசு முறையாக செலவு செய்யவில்லை என்று கூறி சென்னை ஐகோர்ட்டில் வக்கீல் ஏ.பி.சூரியபிரகாசம் என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.

அதில், ‘கடந்த 4 ஆண்டுகளில் தமிழக அரசுக்கு ஒதுக்கப்பட்ட ரூ. 190 கோடியில் தமிழக அரசு வெறும் ரூ. 6 கோடியை மட்டுமே செலவழித்துள்ளது. மீதித் தொகையை மத்திய அரசுக்கே திருப்பி அனுப்பி விட்டது என்று மனுதாரர் குற்றம் சாட்டினார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், மத்திய அரசிடம் நிர்பயா நிதி எவ்வளவு பெறப்பட்டது? எவ்வளவு செலவு செய்யப்பட்டது? உள்ளிட்ட விவரங்கள் அறிக்கையாக தமிழக அரசு தாக்கல் செய்ய வேண்டும் என்று கடந்த மாதம் உத்தரவிட்டனர்.

இந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் சுந்தரேஷ், கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு தரப்பில் தாக்கல் செய்த அறிக்கையில், தமிழக அரசுக்கு நிர்பயா நிதியில் இருந்து ரூ.1672.64 கோடி வழங்கப்பட்டது.

அதில் வெறும் ரூ.45.88 கோடி மட்டும் தமிழக அரசு பயன்படுத்தியுள்ளது என்று கூறப்பட்டு இருந்தது. இதை சுட்டிக்காட்டி மனுதாரர் சூரியபிரகாசம் வாதிட்டார். தமிழக அரசு தரப்பில் பதில் அளிக்க கால அவகாசம் கேட்கப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள், விசாரணையை 2 வாரத்துக்கு தள்ளிவைத்தனர்.

மேலும் மத்திய அரசின் நிதியை ஏன் முறையாக பயன்படுத்தவில்லை? என்று தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பினர். இதற்கு விரிவான பதிலை அளிக்கவும் உத்தரவிட்டனர்.
Tags:    

Similar News