செய்திகள்
கோப்புப்படம்

பிளஸ்-2 தேர்வில் காப்பி: 11 மாணவர்கள் 3 பருவம் தேர்வு எழுத தடை

Published On 2020-03-03 05:54 GMT   |   Update On 2020-03-03 05:54 GMT
பிளஸ்-2 பொதுத்தேர்வில் தமிழ் தேர்வு எளிதாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்த நிலையில் 11 மாணவர்கள் காப்பி அடித்து சிக்கி உள்ளனர்.
சென்னை:

பிளஸ்-2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. முதல் நாளான நேற்று தமிழ் மொழிப்பாடம் தேர்வு நடந்தது.

8 லட்சத்து 16 ஆயிரம் மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினர். இதுதவிர தனித்தேர்வர்கள் 20 ஆயிரம் பேரும் பரீட்சை எழுதினார்கள்.

தேர்வு மையத்துக்கு பேனா, பென்சில், ஹால் டிக்கெட் தவிர வேறு எதையும் கொண்டு செல்ல அனுமதிக்கவில்லை. தேர்வில் ஆள்மாறாட்டம், காப்பி அடித்தல் போன்ற முறைகேடுகள் நடைபெறாமல் தடுக்க புகைப்படத்துடன் கூடிய ஹால்டிக்கெட்டை ஏற்பாடு செய்தனர்.

தமிழ் தேர்வு எளிதாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்த நிலையில் 11 மாணவர்கள் காப்பி அடித்து சிக்கி உள்ளனர். பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் ‘பிட்’ அடித்தபோது கையும் களவுமாக பிடிப்பட்டனர். அவர்கள் அனைவரும் பழைய பாடத்திட்டத்தில் தேர்வு எழுதியவர்கள். சென்னையை சேர்ந்த 7 பேரும், வேலூர் மாவட்டத்தை சேர்ந்த 4 பேரும் சிக்கினர்.

பிடிப்பட்ட 11 மாணவர்களும் தேர்வு எழுதும் ஹாலில் இருந்து வெளியேற்றப்பட்டனர். பறக்கும் படையினர் கல்வி அதிகாரிகளிடம் அவர்களை ஒப்படைத்தனர்.

காப்பி அடித்து தேர்வு எழுதினாலோ, துண்டு சீட்டு வைத்து இருந்தாலோ அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. பிடிப்பட்ட 11 பேரும் காப்பி அடித்ததால் 3 பருவத்திற்கு தேர்வு எழுத முடியாது.

இதுகுறித்து தேர்வுத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், தேர்வு மையத்தில் துண்டு சீட்டு வைத்திருந்து எழுதாமல் இருந்தால் 2 பருவமும், விடைத்தாளில் எழுதி இருந்தால் 3 பருவமும் தேர்வு எழுத தடை விதிக்கப்படும்.

ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதினால் 3 ஆண்டு சிறைத்தண்டனை கிடைப்பதோடு தேர்வு எழுத முடியாது என்றார்.
Tags:    

Similar News