செய்திகள்
தங்கம் தென்னரசு

சாலை பணிகளை விரைந்து முடிக்காவிட்டால் கிராம மக்களை திரட்டி போராட்டம் - தங்கம் தென்னரசு

Published On 2020-02-28 14:05 GMT   |   Update On 2020-02-28 14:05 GMT
திருச்சுழி தொகுதியில் சாலை பணிகளை விரைந்து முடிக்காவிட்டால் கிராம மக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் என தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
அருப்புக்கோட்டை:

திருச்சுழி எம்.எல்.ஏ. தங்க தென்னரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

திருச்சுழி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நெடுஞ்சாலைத்துறையைச் சேர்ந்த சில மாவட்ட முக்கிய சாலைகள், இதர மாவட்ட சாலைகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளன.

இந்த சாலைகளை மேம்பாடு செய்யக்கோரி கடந்த வருடம் தி.மு.க. சார்பில் போராட்டம் நடத்தியதை அடுத்து சில மாவட்ட முக்கிய சாலைகள் ஒப்பந்த புள்ளிகள் கோரப்பட்டு வேலைகள் தொடங்கப்பட்டன.

அவ்வாறு பணிகள் தொடங்கப்பட்ட மீனாட்சிபுரம்- அ.முக்குளம் மாவட்ட முக்கிய சாலையானது 14 கி.மீ. தூரம் கொண்டதாகும். இந்த சாலையை சுமார் 50 கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் பயன்படுத்தி வருகிறார்கள்.

சாலையை தரம் மேம்பாடு செய்ய 7.1.2019-ந் தேதியில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் ஒப்பந்தப்புள்ளிகள் பெறப்பட்டு, பணி ஆணை நெடுஞ்சாலை துறையில் தகுதியற்ற ஒப்பந்ததாரர் ஒருவருக்கு வழங்கப்பட்டு பணிகள் மிக மெதுவாக நடைபெற்று வந்தது.

கடந்த 6 மாத காலமாக பாலம் கட்டும் பணிகள் மற்றும் சாலை பணிகள் ஏதும் நடைபெறாமல், சாலையானது கடந்த வருடத்தை காட்டிலும் மிகவும் மோசமடைந்து பொதுமக்களின் அவசர கால வாகங்கள், ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் கூட செல்ல இயலாத நிலையில் தற்போது உள்ளது. இதனால் இந்த சாலையை பயன்படுத்தும் சுற்று வட்டார கிராமத்தைச் சேர்ந்த கிராம மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பலமுறை அதிகாரிகளிடம் எடுத்துக்கூறியும், முறையான வகையில் தரமான சாலையை விரைவாக அமைக்க எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை.

எனவே நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உடனடியாக இந்த பணிகளை நிறைவேற்றாவிட்டால் சாலையை பயன்படுத்தும் சுமார் 50 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்களை திரட்டி மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும். வருகிற சட்டமன்ற தொடரிலும் இந்த பிரச்சினை எதிரொலிக்கும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News