செய்திகள்
சுட்டுக்கொல்லப்பட்ட சப்இன்ஸ்பெக்டர் வில்சன் மகளுக்கு அரசு வேலைக்கான பணி நியமன ஆணை வழங்கப்பட்டபோது எடுத்தப்படம்

சப்-இன்ஸ்பெக்டர் மகளுக்கு அரசு வேலை பணிநியமன ஆணை வழங்கப்பட்டது

Published On 2020-02-28 08:54 GMT   |   Update On 2020-02-28 08:54 GMT
பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் மகளுக்கு அரசு வேலைக்கான பணி நியமன ஆணை இன்று வழங்கப்பட்டது.
நாகர்கோவில்:

களியக்காவிளையில் சோதனைச்சாவடி பணியில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் வில்சன், பயங்கரவாதிகளால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.

இதனால் வில்சனின் மனைவி ஏஞ்சல் மேரி, மகள்கள் ஆன்டிரிஸ் ரினிஜா, வினிதா ஆகியோர் பரிதவிப்புக்குள்ளானார்கள்.

வில்சனை இழந்து தவித்த அவரது குடும்பத்தினரை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் அழைத்து ஆறுதல் கூறினார். மேலும் அவர்களது குடும்பத்துக்கு ரூ.1 கோடி அரசு நிதி உதவி வழங்கப்பட்டது.

இதுதவிர வில்சனின் மகளுக்கு அரசு வேலை வழங்கப்படும் எனவும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதி அளித்து இருந்தார். அதன்படி வில்சனின் மூத்த மகளான ஆன்டிரிஸ் ரினிஜாவுக்கு (வயது 27) வருவாய்த்துறையில் இளநிலை உதவியாளர் வேலை வழங்கப்பட்டுள்ளது. இதற்கான நியமன ஆணை இன்று வழங்கப்பட்டது.

நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம், கலெக்டர் பிரசாந்த் வடநேரே ஆகியோர் வேலைக்கான ஆணையை ஆன்டிரிஸ் ரினிஜாவிடம் வழங்கினார்.

ஏற்கனவே முதல்-அமைச்சர் வழங்கிய ரூ.1 கோடி எனது தாயார் ஏஞ்சல் மேரி பெயரில் டெபாசிட் செய்துள்ளோம். இப்போது அரசு வேலை வழங்கியுள்ள முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். நான் எம்.இ. படித்துள்ளேன். எனது தாய், தங்கையை நல்லபடியாக பார்த்துக் கொள்வேன். அரசு வேலை வழங்கிய முதல்-அமைச்சரை நேரில் சந்தித்து நன்றி தெரிவிக்க விருப்பம் தெரிவித்தேன். அடுத்த வாரம் சென்னை அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்வதாக கூறி உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆன்டிரிஸ் ரினிஜாவுக்கு திருமணமாகி ஒரு பெண் குழந்தை உள்ளது. வில்சனின் 2-வது மகள் வினிதா மனநலம் பாதிக்கப்பட்டவர்.
Tags:    

Similar News