செய்திகள்
நீட் தேர்வு

நீட் தேர்வில் ஆள் மாறாட்டம்- மேலும் மாணவர்கள் சிக்குகிறார்கள்

Published On 2020-02-27 10:17 GMT   |   Update On 2020-02-27 10:17 GMT
2018-ம் ஆண்டு நடைபெற்ற நீட் தேர்விலும் ஆள் மாறாட்டம் நடைபெற்றது அம்பலமாகி உள்ளதால் மேலும் பல மாணவர்கள் சிக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை:

நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்து மருத்துவக் கல்லூரிகளில் தமிழக மாணவர்கள் சேர்ந்த விவகாரம் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் மூலமாக தேர்வு எழுதிய பலர் பிடிபட்டனர்.

இது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் 7 மாணவர்கள், 6 பெற்றோர்கள், 3 இடைத்தரகர்கள் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்து இருந்தனர்.

இந்த நிலையில் 2018-ம் ஆண்டு நடைபெற்ற நீட் தேர்விலும் ஆள் மாறாட்டம் நடைபெற்றது அம்பலமாகி உள்ளது. சென்னை மருத்துவக் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்த மாணவர் தனஷ்குமார் மோசடியாக ஆள் மாறாட்டம் செய்து தேர்ச்சி பெற்றது கண்டுபிடிக்கப்பட்டது.

பீகாரில் தேர்வு மையத்தை தேர்ந்தெடுத்து வேறு நபர் மூலமாக இந்தி தெரியாமலேயே தனுஷ்குமார் வெற்றி பெற்று இருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதையடுத்து மாணவர் தனுஷ்குமார், அவரது தந்தை தேவேந்திரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இடைத்தரகர் ஒருவர் மூலம் ரூ.20 லட்சம் பணம் கொடுத்து ஆள் மாறாட்டத்துக்கு இன்னொரு மாணவரை தேவேந்திரன் தேர்வு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து இந்த மாணவரையும், ரூ.20 லட்சம் வாங்கிய இடைத்தரகரையும் தேடி கண்டு பிடிக்கும் பணியில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

நீட் தேர்வு விவகாரத்தில் 2018-ம் ஆண்டு இதுபோன்று மேலும் பல மாணவர்கள் ஆள் மாறாட்டம் மூலமாக தேர்ச்சி பெற்று இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதையடுத்து 2018-ம் ஆண்டு மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்த மாணவர்களின் பட்டியலை தயாரித்து யார்- யார் மோசடியில் ஈடுபட்டுள்ளனர் என்பது பற்றி விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மருத்துவக் கல்லூரி முதல்வர்கள், மாணவர்களின் சான்றிதழ்களை சரிபார்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மாணவர் தனுஷ் குமார் போன்று ஆள் மாறாட்டம் மூலமாக படித்து வருபவர்கள் பற்றி தெரிய வந்தால் அவர்கள் மீது சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் புகார் அளிக்கவும் மருத்துவக் கல்லூரி முதல்வர்கள் முடிவுசெய்துள்ளனர்.

இதன் மூலம் நீட் விவகாரத்தில் மேலும் பல மாணவர்கள் சிக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Tags:    

Similar News