செய்திகள்
பாஜக

தமிழகத்தில், நாளை நடைபெறும் பா.ஜனதா போராட்டத்துக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு

Published On 2020-02-27 06:00 GMT   |   Update On 2020-02-27 06:00 GMT
திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக தமிழகத்தில் நாளை நடைபெறும் பாரதிய ஜனதா போராட்டத்துக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை:

குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக போராட்டம் நடத்தும் முஸ்லிம் அமைப்பினரை கண்டித்தும், தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு எதிராகவும் நாளை தமிழகம் முழுவதும் பாரதிய ஜனதா கட்சியினர் போராட்டம் நடத்துகிறார்கள்.

சென்னை சேப்பாக்கத்தில் பாரதிய ஜனதா மூத்த தலைவர் இல.கணேசன் தலைமையில் நடக்கும் போராட்டத்தில் சென்னையில் உள்ள 7 மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்கிறார்கள்.

குடியுரிமை சட்டத்துக்கு எதிராக முஸ்லிம்கள் போராட்டம் நடத்திய அதே இடத்தில்தான் பாரதிய ஜனதா கட்சியினரும் கூடுகிறார்கள். இதன் காரணமாக நாளை பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் நாளை மாவட்ட கலெக்டர் அலுவலகங்கள் முன்பு போராட்டம் நடைபெறுகிறது. இதற்காக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளும் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளனர்.

போராட்டத்தின் போது அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் தடுப்பதற்காக முன் ஏற்பாடுகளையும் போலீசார் செய்துள்ளனர்.

டெல்லியில் குடியுரிமை சட்டத்துக்கு ஆதரவாக நடைபெற்ற போராட்டத்தின் போதுதான் கலவரம் ஏற்பட்டது. இதில் 35 பேர் பலியாகி இருக்கும் நிலையில் ஏராளமான பொதுசொத்துக்களும் சேதப்படுத்தப்பட்டன.

இதையடுத்து மத்திய அரசு குடியுரிமை சட்ட எதிர்ப்பு- ஆதரவு போராட்டங்களை கவனமாக கையாளுமாறு மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளது. இதன் காரணமாக நாளை பாரதிய ஜனதாவினர் நடத்தும் போராட்டத்துக்கு போலீசார் இன்றே உஷார்படுத்தப்பட்டு உள்ளனர்.

குடியுரிமை சட்ட விவகாரம் தொடர்பான எந்த போராட்டங்களுக்கும் போலீசார் அனுமதி அளிப்பதில்லை. இதன்படி நாளை நடைபெறும் போராட்டத்துக்கும் போலீஸ் அனுமதி அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News