செய்திகள்
அமைச்சர் ஆர்பி உதயகுமார்

அதிமுக விழுவது போல விழும், மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும்- அமைச்சர் உதயகுமார்

Published On 2020-02-26 08:41 GMT   |   Update On 2020-02-26 08:41 GMT
அதிமுக விழுவது போல விழும், ஆனால் விஸ்வரூபம் கொண்டு எழும். இந்த இயக்கத்தை யாராலும் அழிக்க முடியாது என்று வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.
அலங்காநல்லூர்:

மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் அலங்காநல்லூர் எம்.ஜி.ஆர் திடலில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 72-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது.

கூட்டத்தில் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அவர் பேசியதாவது:-

மதுரை புறநகர் மாவட்டத்தில் சோழவந்தான் தொகுதி அ.தி.மு.க.வின் எஃகு கோட்டையாக தொடர்ந்து இருந்து வருகிறது. மேலும் இந்த தொகுதி மக்கள் இரட்டை இலை சின்னத்திற்கு தான் அதிக வாய்ப்பு கொடுத்து தொடர்ந்து வெற்றி வாய்ப்பை தந்து வருகிறார்கள். மற்ற சின்னங்களை அவர்கள் நினைக்கவில்லை.



மக்களின் செல்வாக்கு உள்ள முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில் தமிழகத்தில் நல்லாட்சி நடந்து வருகிறது.

இந்த அரசு தாக்கு பிடிக்குமா? என கூறிய எதிர்க்கட்சியினர் இப்போது அவர்கள் தான் தாக்குப் பிடிக்காமல் இருக்கிறார்கள்.

அ.தி.மு.க.வின் கடைக்கோடி தொண்டர்களின் ஒருவனான ஆர்.பி. உதயகுமார் எதிர்க்கட்சி தலைவருக்கு ஒன்றை மட்டும் கூறிக்கொள்கிறேன். அ.தி.மு.க. விழுவது போல விழும், ஆனால் விஸ்வரூபம் கொண்டு எழும். இந்த இயக்கத்தை யாராலும் அழிக்க முடியாது.

தமிழக மக்களுக்காக கோவில்களில் அன்னதான திட்டம், தாலிக்கு தங்கம் உட்பட பல்வேறு நலத்திட்ட உதவிகளை அம்மா அவர்கள் அறிவித்து அவை அனைத்தும் செயல்பட்டு வருகிறது.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் தினமான பிப்ரவரி 24-ல் பெண்கள் பாதுகாப்பு தினமாக அறிவித்து அதற்கான அரசாணையை அரசு உடனே வெளியிட்டது.

இதுபோன்ற நல்ல திட்டங்கள் எல்லாம் தி.மு.க.வினருக்கு தெரியாது. அறிவுரை கூறவும் அங்கு ஆள் இல்லை. தமிழகத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் ஏழை எளியோருக்கு உதவும் வகையில் அம்மாவின் அரசு செயல்படுத்தி வருகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த பொதுக்கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் மாணிக்கம், சரவணன் உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News