செய்திகள்
தேசிய விருது பெற்ற வெள்ளியங்கிரி உழவன் உற்பத்தியாளர் நிறுவனம்

வெள்ளியங்கிரி உழவன் உற்பத்தியாளர் நிறுவனத்துக்கு தேசிய விருது

Published On 2020-02-25 13:35 GMT   |   Update On 2020-02-25 13:35 GMT
ஈஷா அவுட்ரீச்சின் வழிகாட்டுதலில் இயங்கும் வெள்ளியங்கிரி உழவன் உற்பத்தியாளர் நிறுவனத்துக்கு தேசிய விருது வழங்கப்பட்டது.
புதுடெல்லியில் நேற்று நடந்த அவுட்லுக் வேளாண் மாநாட்டில் ‘சிறந்த எஃப்.பி.ஓ’ என்ற பிரிவில் தேசிய விருது வழங்கப்பட்டது. மத்திய வேளாண்துறை மந்திரி நரேந்திர சிங் தோமர் இந்நிறுவனத்தை சேர்ந்த விவசாய பிரதிநிதிகளுக்கு இவ்விருதினை வழங்கி கவுரவித்தார்.

வெள்ளியங்கிரி உழவன் உற்பத்தியாளர் நிறுவனம் என்பது 2013-ம் ஆண்டு கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் தொடங்கப்பட்ட ஒரு உழவன் உற்பத்தியாளர் நிறுவனம் ஆகும். இந்நிறுவனம் ஈஷா அறக்கட்டளையின் சமூக நலன் மற்றும் சுற்றுச்சூழல் மேம்பாட்டு அமைப்பான ஈஷா அவுட்ரீச்சின் வழங்காட்டுதலில் செயல்பட்டு வருகிறது.

தமிழக அளவில் முதல் இடத்தில் இருக்கும் இந்நிறுவனத்தில் 1000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் உறுப்பினர்களாக உள்ளனர். அதில் 70 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் சிறு மற்றும் குறு விவசாயிகள், 38 சதவீதம் பேர் பெண் விவசாயிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிறுவனத்தில் உறுப்பினர்களாக உள்ள விவசாயிகள் தேங்காய், பாக்கு, மஞ்சள், காய்கறி, வாழை போன்றவற்றை உற்பத்தி செய்து நேரடியாக விற்பனை செய்து வருகின்றனர். இதனால், தொண்டாமுத்தூர் விவசாயிகளின் பொருளாதாரமும், வாழ்வாதாரமும் நன்கு மேம்பட்டுள்ளது. வெள்ளியங்கிரி உழவன் நிறுவனம் கடந்த நிதியாண்டில் (2018-19) சுமார் 12 கோடி ஆண்டு வருமானம் (Annual Turnover) ஈட்டி சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வேளாண்துறையின் வளர்ச்சிக்கு பங்காற்றும் விவசாயிகள், நிறுவனங்கள், விஞ்ஞானிகள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு விருதுகள் மூலம் அங்கீகாரம் அளிப்பதற்காக ‘அவுட்லுக் வேளாண் மாநாடு’ ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது.

இந்த ஆண்டு இவ்விருதை தேர்வு செய்யும் நடுவர் குழுவில் மத்திய வேளாண் மற்றும் பண்ணை நல மேம்பாட்டு அமைச்சகத்தின் செயலாளர் சஞ்சய் அகர்வால், தேசிய கூட்டுறவு மேம்பாட்டு கழகத்தின் மேலாண் இயக்குநர் சந்தீப் குமார் நாயக், இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலின் துணை இயக்குநர்  ஏ.கே.சிங் உள்ளிட்ட பல துறைசார் வல்லுனர்கள் இடம்பெற்றிருந்தனர்.
Tags:    

Similar News