செய்திகள்
கோட்டை பால் தெருவில் கருப்புகொடி கட்டப்பட்டுள்ளது.

குடியுரிமை சட்டத்தை கண்டித்து வீடு-கடைகளில்  கருப்பு கொடி ஏற்றி முஸ்லிம்கள் போராட்டம்

Published On 2020-02-25 10:49 GMT   |   Update On 2020-02-25 10:49 GMT
திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்தை கண்டித்து சேலம் கோட்டை மேல்தெரு பள்ளி வாசல் பகுதியில் வீடு, கடைகளில் கருப்பு கொடி ஏற்றி முஸ்லிம்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சேலம்:

குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப் பெறக்கோரி சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் தாக்குதல் நத்திய சம்பவத்தை கண்டித்தும், குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தியும், தமிழகம் முழுவதும் இஸ்லாமிய அமைப்பினர் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

சேலம் கோட்டை மேல்தெரு பள்ளி வாசல் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட முஸ்லிம் பெண்கள் கடந்த 17-ந்தேதி போராட்டத்தை தொடங்கினர்.

8-வது நாளாக நேற்றும் அவர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கருப்பு கொடி ஏந்தி குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினார்கள். மேலும் வீடு, கடைகளில் கருப்பு கொடியேற்றியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குடியுரிமை திருத்த சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும், சென்னை போராட்டத்தில் தடியடி நடத்திய காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தி அறவழி போராட்டத்தை நடத்தி வருகிறோம்.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சேலம் வந்துள்ள நிலையில் எங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் வீடு- கடைகளில் கருப்புகொடி ஏற்றி உள்ளோம்.

தமிழக சட்டப்பேரவையில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றும் வரை காத்திருப்பு போராட்டம் தொடரும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

Similar News