செய்திகள்
லாரி டிரைவர் சூர்யா

சேலம் அருகே லாரி டிரைவர் வெட்டிக் கொலை - மர்ம கும்பல் வெறிச்செயல்

Published On 2020-02-25 09:06 GMT   |   Update On 2020-02-25 09:06 GMT
சேலம் அருகே லாரி டிரைவர் ஓட ஓட விரட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கருப்பூர்:

சேலம் அருகே உள்ள கருப்பூர் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட கோட்ட கவுண்டம்பட்டி பெரியாண்டிச்சி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சூர்யா (வயது 27). டிரைவர். இவருடைய மனைவி சுகன்யா (26).

சூர்யா சொந்தமாக மினி லாரி வைத்து ஓட்டி வந்தார். நேற்று இரவு லாரியை கோட்ட கவுண்டம்பட்டியில் சாலையோரமாக நிறுத்தி இருந்தார். இந்த லாரியில் தூங்க போவதாக சூர்யா, தனது மனைவியிடம் சொல்லிவிட்டு சென்றார்.

இந்த நிலையில் இரவு சுமார் 9.30 மணி அளவில் சூர்யா திடீரென தனது தம்பி சுரேந்திரனுக்கு செல்போனில் தொடர்பு கொண்டு, பாகல்பட்டி ரெயில்வே கேட் அருகே தண்டவாளத்தில் வைத்து என்னை வெட்டுகிறார்கள். தம்பி ஓடி வந்து என்னை காப்பாற்று, வெட்டுகிறார்கள், குத்துகிறார்கள் என கதறியபடி கூறினார். சிறிது நேரத்தில் செல்போன் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

இதையடுத்து சுரேந்திரன், அவரது மனைவி சுகன்யா மற்றும் பெற்றோர், உறவினர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தனர். அப்போது அங்கு தண்டவாளத்தையொட்டியபடி சூர்யா, தலையில் பலத்த வெட்டு காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.

அவரை, மர்ம நபர்கள் ஓட ஓட விரட்டி இருப்பதும், தப்பி ஓடுவதற்காக தண்டவாளத்தில் ஏறியபோது அவரை சுற்றி வளைத்து அரிவாள் மற்றும் பயங்கர ஆயுதங்களை கொண்டு துடிதுடிக்க வெட்டி சாய்த்திருப்பதும் தெரியவந்தது.

உறவினர்கள் சூர்யாவை மீட்டு அருகில் உள்ள டால்மியா போர்டு பகுதியில் செயல்படும் ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

சூர்யாவின் நிலைமை கவலைக்கிடமாக இருக்கவே, டாக்டர்கள், அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவரை ஆம்புலன்ஸ் வாகனத்தில் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இங்கு அவசர வார்டில் அனுமதிக்கப்பட்ட சூர்யா இன்று அதிகாலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். அவரது உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர்.

பிரேத பரிசோதனைக்காக சூர்யா உடல், பிணவறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அப்போது உறவினர்கள் ஆத்திரத்தில் பிணவறையை முற்றுகையிட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது அவர்கள் சூர்யாவை கொலை செய்த கும்பலை கூண்டோடு கைது செய்தால் தான் உடலை வாங்குவோம் என தெரிவித்தனர்.

அதற்கு போலீசார் உங்களுக்கு யார் மீது சந்தேகம் உள்ளதோ, அவர்கள் மீது நீங்கள் முதலில் புகார் கொடுங்கள், சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கிறோம் என்றனர்.

அதன்படி உறவினர்கள் ஓமலூர் போலீஸ் நிலையத்திற்கு புகார் கொடுக்க சென்றனர்.

கொலை செய்யப்பட்ட சூர்யாவின் தம்பி கூறுகையில், உள்ளாட்சி தேர்தல் நடப்பதற்கு முன்பு எனது அண்ணனுக்கும், உள்ளூர் பகுதியை சேர்ந்த அரசியல் கட்சி பிரமுகர்களுக்கும் இடையே தேர்தல் தொடர்பாக முன்விரோதம் இருந்தது.

அப்போது எனது அண்ணனை கொலை செய்யாமல் விடமாட்டோம் என கூறினர். இந்த நிலையில் எனது அண்ணனை தீர்த்துக் கட்டியுள்ளனர் என கண்ணீர் மல்க கூறினார்.

மர்ம நபர்கள் வெட்டும் போது சூர்யா தனது கைகளால் தடுத்துள்ளார். அவரது கையில் பலமாக வெட்டி உள்ளனர். ஓடும்போது கால்களையும், தலையையும் வெட்டி உள்ளனர். எங்களுக்கு அந்த அரசியல் கட்சி பிரமுகர்கள் மீது தான் சந்தேகம் உள்ளது என தெரிவித்தார்.

சுகன்யாவுக்கு சொந்த ஊர் சங்கீதப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட வெங்காயனூர் பகுதியாகும். இவருக்கும் கொலையுண்ட சூர்யாவுக்கும் திருமணம் நடந்து 2½ வருடங்கள் ஆகிறது. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. தற்போது சுகன்யா 3 மாத கர்ப்பிணியாக உள்ளார்.
Tags:    

Similar News