செய்திகள்
போராட்டத்தின் போது போலீசாருக்கும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தினருக்கும் தள்ளு முள்ளு ஏற்பட்டது

டெல்லி கலவரத்தை கண்டித்து திருப்பூரில் ரெயில் நிலையம், தபால் நிலையம் முற்றுகை

Published On 2020-02-25 07:36 GMT   |   Update On 2020-02-25 07:36 GMT
டெல்லி கலவரத்தை கண்டித்து திருப்பூரில் ரெயில் நிலையம் மற்றும் தபால் நிலையத்தை முற்றுகையிட்ட த.ம.மு.க.வினரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர்:

வடகிழக்கு டெல்லியில் குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் இடையே மோதல் நடைபெற்று வன்முறையாக மாறியது. துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது.இந்த வன்முறையில் 5 பேர் பலியானார்கள்.

டெல்லியில் நடைபெற்ற வன்முறை மற்றும் துப்பாக்கி சூட்டை கண்டித்து திருப்பூரில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தினர் இன்று திடீரென ரெயில் நிலையத்தை முற்றுகையிட திரண்டு வந்தனர்.

அவர்களை அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் தடுப்பு கம்பிகள் அமைத்து தடுத்தனர். இதனால் போலீசாருக்கும் த.மு.மு.க.வினருக்கும் இடையே தள்ளு முள்ளு உருவானது.

அதன் பின்னர் அங்கிருந்த சென்ற த.மு.மு.க.வினர் தபால் நிலையத்தை முற்றுகையிட சென்றனர். அங்கும் போலீசார் தடுத்ததால் தள்ளு முள்ளு ஏற்பட்டது.

பின்னர் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தினர் ரெயில்வே மேம்பாலம் சென்றனர். அங்கு திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் அங்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

ஆனால் பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். 100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

ரெயில் நிலையம் முற்றுகை மற்றும் மறியல் காரணமாக திருப்பூரில் இன்று பரபரப்பு ஏற்பட்டது.
Tags:    

Similar News