செய்திகள்
காளிமுத்து

25 ஆண்டுகளாக தண்டவாளத்தில் கிடக்கும் உடல்களை சுமக்கும் முதியவர்

Published On 2020-02-25 06:03 GMT   |   Update On 2020-02-25 06:03 GMT
வாழ்நாள் முழுவதும் தண்டவாளத்தில் கிடக்கும் உடல்களை அகற்றும் பணியில் ஈடுபட விரும்புகிறேன் என்று மதுரையை சேர்ந்த முதியவர் காளிமுத்து கூறினார்.
மதுரை:

மதுரை ரெயில் நிலையம் அடுத்துள்ள மேலப்பெருமாள் மேஸ்திரி வீதியில் மூடிய கடைக்கு முன்பு அனாதையாக படுத்திருக்கும் அந்த முதியவரை நிறைய பேர் பார்த்திருக்க முடியும். அவரது பெயர் காளிமுத்து (வயது 67).

டாஸ்மாக் பாரில் மது அருந்தி விட்டு படுத்திருக்கும் அவரின் காதுகள் ‘டேய் காளி’ என்ற ஒற்றை வரி வார்த்தைக்காக ஏங்கி காத்து கிடக்கும்.

மதுரை மாநகரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள ரெயில் தண்டவாளத்தில் ரெயிலில் அடிபட்டு சிதைந்து கிடக்கும் சடலங்களை எடுக்கும் பணியில் காளிமுத்து கடந்த 25 ஆண்டுகளாக ஈடுபட்டு வருகிறார்.

ரெயில் தண்டவாள பகுதிகளில் பிணம் கிடப்பது தெரியவந்தால், ஆர்.பி.எப். போலீசார் எந்த நேரமும் காளிமுத்துவை தேடிச் சென்று விடுவார்கள்.

போலீசாரின் ‘டேய் காளி’ என்கிற அழைப்பு வரும் அடுத்த கணமே காளிமுத்து வெற்றுடம்பு, காலில் செருப்பு சகிதம் கிளம்பி போய் விடுவார்.

ரெயில் தண்டவாளத்தில் சிதைந்து கிடக்கும் உடலை அருவருப்பின்றி எடுத்துக்கொண்டு சைக்கிள் ரிக்‌ஷாவில் மதுரை அரசு ஆஸ்பத்திரி பிரேத பரிசோதனை கிடங்குக்கு கொண்டு செல்வார். இதற்காக அவருக்கு ரூ.200 முதல் ரூ.500 வரை வழங்கப்படுகிறது.

துணிச்சலான இந்த பணி குறித்து காளிமுத்து கூறியதாவது:-

“நான் முன்பு சைக்கிள் ரிக்‌ஷா ஓட்டுநராக இருந்தேன். பெட்ரோல்-டீசல் வாகனங்கள் புழக்கத்துக்கு வந்த பிறகு வருமானம் வெகுவாக குறைந்து விட்டது. இதனால் நான் வேறு தொழிலுக்கு மாற வேண்டிய இக்கட்டான சூழ்நிலை ஏற்பட்டது.

இந்த நிலையில் 25 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நாள் மதுரை ரெயில்வே போலீசார் என்னிடம் வந்து ‘தண்டவாளத்தில் ஒரு பிணம் கிடக்கிறது, பிரேத பரிசோதனை கிடங்குக்கு எடுத்து செல்கிறாயா?’ என்று கேட்டனர்.

இதையடுத்து நான் சம்பவ இடத்தில் பிணத்தை எடுத்து சவக்கிடங்கில் இறக்கினேன். இதற்காக எனக்கு அப்போது ரூ.200 சன்மானம் கிடைத்தது. இது எனக்கு அப்போது பெருந்தொகையாக இருந்தது. எனவே மதுரை ரெயில் தண்டவாளத்தில் பிணம் அகற்றுவதையே தொழிலாக செய்து வருகிறேன்.

நான் முந்தைய நாட்களில் சட்டை அணிந்து தான் பிணம் அகற்றும் பணியில் ஈடுபட்டேன். அப்போது சட்டையில் ரத்தக்கறை படும். இது துவைத்தாலும் போகாது. எனவே வெற்றுடம்புடன் பணியில் ஈடுபடுகிறேன்.

இந்த தொழிலை நான் அவமானமாக கருதவில்லை. நாளைக்கு நான் இறந்தால் யாரோ ஒருவர் தானே என்னை தூக்கிச் செல்லப் போகிறார்?” என்கிற காளிமுத்து வாழ்நாள் முழுவதும் தண்டவாளத்தில் பிணம் அகற்றும் பணியில் ஈடுபட விரும்புகிறேன் என்றார்.



Tags:    

Similar News