செய்திகள்
சென்னை ஐகோர்ட்

நீர்நிலைகளில் உயிரிழப்பை தடுக்க நடவடிக்கை- கலெக்டர்கள் நேரில் ஆஜராக ஐகோர்ட்டு உத்தரவு

Published On 2020-02-24 09:01 GMT   |   Update On 2020-02-24 09:01 GMT
நீர்நிலைகளால் ஏற்படும் உயிரிழப்பை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும். அறிக்கை தாக்கல் செய்யாத கலெக்டர்கள் நேரில் ஆஜராக வேண்டும் என்று ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
சென்னை:

தமிழகத்தில் நீரில் மூழ்கி உயிரிழப்புகள் ஏற்படுவதை தடுக்க கடற்கரைகள், சுற்றுலா தலங்கள், கோவில் குளங்கள், அருவிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளை உருவாக்கக் கோரி, சென்னையைச் சேர்ந்த கோடீஸ்வரி ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில் கோவில் குளங்களில் மூழ்கி உயிரிழப்பு ஏற்படாமல் தடுக்க எடுத்த நடவடிக்கைகள் குறித்து இந்து சமய அறநிலையத்துறை ஏற்கனவே அறிக்கை தாக்கல் செய்துள்ளது. இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் வினீத் கோத்தாரி, ஆர்.சுரேஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, மாவட்டம் தோறும் ஏரி, குளங்களில் மூழ்கி உயிரிழப்புகள் ஏற்படுவதை தடுக்க எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து அறிக்கையை ஒவ்வொரு மாவட்ட கலெக்டர்களும் தனித்தனியாக அறிக்கை தாக்கல் செய்ய இந்த ஐகோர்ட்டு உத்தரவிட்டிருந்தது என்று மனுதாரரின் வக்கீல் கூறினார்.

ஆனால், கலெக்டர்களின் அறிக்கையை தாக்கல் செய்ய அரசு தரப்பில் கால அவகாசம் கேட்கப்பட்டது.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள். இந்த வழக்கை வருகிற மார்ச் 9-ந்தேதிக்கு தள்ளிவைக்கிறோம். அதற்குள் மாவட்ட கலெக்டர்கள் அறிக்கைகளை தாக்கல் செய்யவேண்டும். அறிக்கை தாக்கல் செய்யாத கலெக்டர்கள் அன்று நேரில் ஆஜராக வேண்டும்’ என்ற உத்தரவிட்டனர்.
Tags:    

Similar News