செய்திகள்
திருச்சி அரசு ஆஸ்பத்திரியை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்ட என்ஜினீயரிங் மாணவர்கள்.

மோதலில் ஈடுபட்டதால் என்ஜினீயரிங் மாணவர்களுக்கு நூதன தண்டனை வழங்கிய கோர்ட்டு

Published On 2020-02-22 14:57 GMT   |   Update On 2020-02-22 14:57 GMT
சாலை மற்றும் கல்லூரி வளாகத்தில் மோதலில் ஈடுபட்ட என்ஜினீயரிங் மாணவர்களுக்கு கோர்ட்டு நூதன தண்டனை வழங்கியது.
திருச்சி:

திருச்சி பிராட்டியூரில் தனியார் பொறியியல் கல்லூரி உள்ளது. இக்கல்லூரியில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 3-ம் ஆண்டு மெக்கானிக்கல் பிரிவு மாணவர்களுக்கும், இறுதியாண்டு படிக்கும் மாணவர்களுக்கும் மோதல் ஏற்பட்டது. அப்போது இரு தரப்பினரும் கட்டைகளாலும், பீர் பாட்டில்களாலும் தாக்கி கொண்டனர்.

கல்லூரி வளாகத்தில் தொடங்கிய இந்த மோதல் சாலைக்கும் சென்றது. மோதலில் 8 பேர் மண்டை உடைந்தது. 4பேர் பலத்த காயமடைந்தனர். இது தொடர்பாக திருச்சி போலீசார் இரு தரப்பையும் சேர்ந்த 28 மாணவர்கள் மீது கொலை மிரட்டல், ஆபாசமாக பேசுதல் ஆயுதங்களால் தாக்கி கொள்ளுதல், காயம் ஏற்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிந்து அவர்களை கைது செய்தனர்.

இதனிடையே இரு தரப்பினரிடையே சமாதானம் ஏற்பட்டதால் தங்கள் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி 28 பேரும் ஐகோர்ட்டு மதுரை கிளையில் மனு செய்தனர். அந்த மனு நீதிபதி ஏ.டி. ஜெகதீஷ் சந்திரா முன் விசாரணைக்கு வந்தது. மாணவர்கள் தரப்பில் ஆஜரான வக்கீல் அழகுமணி, இந்த மாணவர்கள் மீது இதுவரை எந்த வழக்கும் இல்லை. வழக்கு நிலுவையில் இருந்தால்அவர்களின் எதிர்காலம் பாதிக்கும். இரு தரப்பினரும் சமாதானமாக செல்ல விரும்புகின்றனர்.

எனவே மாணவர்கள் ரத்ததானம் செய்யவோ, ஹெல்மெட் விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபடவோ, மருத்துவமனையில் பொதுமக்களுக்கான பணிளை செய்வது என எந்த நிபந்தனை விதித்தாலும் செய்ய தயாராக உள்ளனர். இந்த நீதிமன்றம் மாணவர்களின் நலன்கருதி வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று வாதிட்டார்.

இதையடுத்து நீதிபதி வழக்கில் உள்ள 28 மாணவர்களும், இன்று 22-ந்தேதி திருச்சி கி.ஆ.பெ. விஸ்வநாதன் அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரிக்கு சென்று பொது வார்டில் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட வேண்டும். சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டது தொடர்பாக மருத்துவமனை முதல்வரிடம் சான்றிதழ் பெற்று வருகிற 26-ந்தேதி கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டார்.

கோர்ட்டு உத்தரவையடுத்து 28 மாணவர்களும் இன்று திருச்சி அரசு ஆஸ்பத்திரி வளாகத்தை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இது குறித்து மாணவர்கள் கூறுகையில், நாங்கள் ஏதோ ஒரு மனநிலையில் மோதிக்கொண்டோம். தற்போது மனம் திருந்தி அனைவரும் ஒற்றுமையாகி விட்டோம். இருப்பினும் செய்த தவறை உணர வேண்டும் என்பதற்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரியை ஒரு நாள் முழுவதும் சுத்தம் செய்ய வேண்டும் என்று நீதிபதி நூதன தண்டனை விதித்தார். அதன்படி இன்று மருத்துவமனையை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளோம்.இந்த தண்டனையை நாங்கள் வாழ்க்கையில் ஒரு விழிப்புணர்வாக கருதுகிறோம் என்றனர்.
Tags:    

Similar News