செய்திகள்
கோப்பு படம்

ஓசூரில் ரூ.10 லட்சம் கேட்டு வங்கி ஊழியர் கடத்தல் - பிரபல ரவுடி உள்பட 4 பேரை பிடிக்க வேட்டை

Published On 2020-02-22 13:25 GMT   |   Update On 2020-02-22 13:25 GMT
ஓசூரில் ரூ.10 லட்சம் கேட்டு வங்கி ஊழியரை காரில் கடத்திச் சென்று கொலை செய்ய முயன்ற பிரபல ரவுடி ராதா என்கிற தேர்ப்பேட்டை ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
ஓசூர்:

ஓசூர் மத்திகிரி அருகே உள்ள குடியிருப்புப் பகுதியைச் சேர்ந்த சேகர் மகன் வினோத் (வயது35), இவர் தனியார் வங்கி ஒன்றில் கடன் தொகை வசூலிப்பவராக பணிபுரிந்து வருகிறார்.

இவர் நேற்று மத்திகிரி கூட்டுச்சாலை அருகில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே காரில் சென்றார். அவர் அங்கு பெட்ரோல் போடுவதற்காக காரை பங்கில் நிறுத்தினர்.

அப்போது அங்கு மற்றொரு காரில் வந்த ரவுடி ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது கூட்டாளிகள் 3 பேர் வினோத்தைத் தாக்கி, தாங்கள் வந்த காரில் அவரை கடத்திச் சென்றனர்.

பின்னர் ஓசூர் பாகலூர் சாலையில் கே.சி.சி. நகர் எதிரில் உள்ள ஒரு பகுதிக்குக் கொண்டு சென்று அவர்கள், வினோத்திடம் ரூ.10 லட்சம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்தனர்.

வினோத்திடம் பணம் எதுவும் இல்லாததை அறிந்த, ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது கூட்டாளிகள் அவரிடம் இருந்த செல்போனையை பறித்து வங்கிக் கணக்கில் ஏதேனும் பணப் பரிவர்த்தனை நடந்துள்ளதா என்றும், அவரது வங்கிக் கணக்கில் பணம் உள்ளதா? என்றும் சோதனை செய்தனர்.

அதிலும் பணம் ஏதும் பரிவர்த்தனை ஆகாததால் ஆத்திரமடைந்த ரவுடி கும்பல் வினோத்தை தாங்கள் வைத்திருந்த ஆயுதங்களால் தாக்கினர்.

இதில் காயமடைந்த வினோத், அந்த ரவுடி கும்பலிடம் இருந்து தப்பி மத்திகிரி போலீஸ் நிலையத்திற்கு வந்து புகார் செய்தார்.

அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து ரவுடி ராதாகிருஷ்ணன் மற்றும் கூட்டாளிகள் உள்பட 4 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

ஓசூர் மாநகராட்சியில் கடந்த 20 ஆண்டுகளாக ரவுடிகள் மோதல், ரியல் எஸ்டேட் கொலைகள், ஆட்களைக் கடத்தி கொலை செய்தல் என குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளன.

ஓசூர் தளி சாலையில் கடத்திச் சென்று பெங்களூரில் கொலை செய்யப்பட்ட கேபிள் டி.வி. அதிபர்கள் தென்னரசு மற்றும் அவரது நண்பர் மணி, ராம் நகர் நூருல்லா, தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனை எதிரில் கொலை செய்யப்பட்ட பாகலூர்அட்கோ வசந்தன், தே.மு.தி.க. மாவட்ட துணைச் செயலர் அம்மன் பாலாஜி, முஸ்தாக், ஜான்பாஷா, கவாலா, இந்து அமைப்பைச் சேர்ந்த சூரி, மகேஷ், ராம் நகர் சேட்டு, முன்னாள் எம்.எல்.ஏ. கோபிநாத்தின் டிரைவர் சிவாஜி, தி.மு.க. பிரமுகர் மன்சூர் என கொலையானவர்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கின்றன.

ரவுடிகளின் அட்டகா சத்தல் கொலை, கடத்தல், கொள்ளை போன்ற தொடர் சம்பவங்களால் ஓசூர் பகுதி பொதுமக்கள் பீதியில் உறைந்து போயுள்ளனர்.

கடந்த சில ஆண்டுகளாக ஓசூரில் பிரபல ரவுடிகளான கொற கோபி, கஜா கோஷ்டி இடையே மோதல் ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் ஓசூரில் ரவுடிகளின் நடவடிக்கைகளைக் கண்காணித்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Tags:    

Similar News