செய்திகள்
கைது

சென்னை விமான நிலையத்தில் தங்கம் கடத்தல்- சுங்க அதிகாரிகள் கைது

Published On 2020-02-22 05:20 GMT   |   Update On 2020-02-22 06:38 GMT
சென்னை விமான நிலையத்தில் இருந்து 12 கிலோ தங்கம் கடத்த முயற்சி செய்த 2 சுங்க துறை அதிகாரிகள் மற்றும் 14 கடத்தல்காரர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை:

சென்னை விமான நிலையத்துக்கு வெளிநாடுகளில் இருந்து தங்கம் கடத்தி வரப்படுவதை தடுக்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சிங்கப்பூர், துபாய், இலங்கை ஆகிய நாடுகளில் இருந்து விமான நிலையத்துக்கு ஒரு கும்பல் பெரிய அளவில் தங்கத்தை கடத்தி வந்துள்ளதாக வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரி பிரித்விராஜன் தலைமையிலான அதிகாரிகள் சென்னை விமான நிலையத்தில் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது சுங்கத்துறை சோதனை முடிந்து வெளியே வந்த 18 பேர் மீது சந்தேகம் ஏற்பட்டது. அவர்களை பிடித்து வருவாய் புலனாய்வு அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

அப்போது அவர்கள் ரூ.5.40 கோடி மதிப்பிலான தங்கத்தை கடத்தி எடுத்து வருவது கண்டுபிடிக்கப்பட் டது. 12 கிலோ 600 கிராம் எடை கொண்ட இந்த தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் அனைவரிடமும் விசாரணையை தீவிரப்படுத்தினர்.

தி.நகரில் உள்ள வருவாய் புலனாய்வு பிரிவு அலுவலகத்துக்கு 18 பேரையும் அதிகாரிகள் அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்தனர்.

இதற்காக அவர்களை விமான நிலையத்தில் இருந்து வாகனங்களில் ஏற்றும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது 18 பேரின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தகராறு செய்தனர்.

இதனை பயன்படுத்தி கடத்தல்காரர்கள் 18 பேரும் தப்பி ஓடிவிட்டனர். இதுபற்றி விமான நிலைய போலீசில் புகார் செய்யப்பட்டது.

கடந்த 19-ந்தேதி நடந்த இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் தப்பி ஓடிய கடத்தல்காரர்கள் உள்பட 16 பேர் கைது செய்யப்பட்டனர்.

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையை சேர்ந்த இம்ரான்நசீர், ரகுமான், ஆஷிக், ஷேக் அப்துல்லா, முகமது நஜிபுல்லா, சையது முகமது, சையது ஜாபர், சிவகங்கை இளையான் குடியை சேர்ந்த காதர் மொய்தீன், திலீப்குமார், திருச்சி அஸ்கர் உசேன், சென்னை திருவல்லிக்கேணி சிக்கந்தர், முகமது, சையது அப்துல்லா ஆகிய 14 பேர் கைதானார்கள். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தங்கம் கடத்தலில் சுங்கத்துறை அதிகாரிகளுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

விமான நிலையத்தில் சுங்கத்துறை ஆய்வாளர்களாக பணிபுரிந்த விகாஷ் குமார், ராஜன், ஓய்வு பெற்ற சுங்க அதிகாரி சதீஷ்குமார் ஆகியோரும் உடந்தையாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களும் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் அனைவரும் எழும்பூர் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

ஓய்வு பெற்ற சுங்சு அதிகாரியான சதீஷ்குமார், கடத்தல்காரர்களுக்கும், சுங்க துறை அதிகாரிகளுக்கும் இடையே நட்பு வட்டத்தை ஏற்படுத்திக் கொண்டு செயல்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

தங்கம் கடத்தலுக்கு லட்சக் கணக்கில் லஞ்சப்பணம் கைமாறி இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. இதுபற்றியும் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Tags:    

Similar News