செய்திகள்
சென்னை மாநகராட்சி

12,722 சதுர மீட்டர் நிலத்தை மெட்ரோ நிறுவனத்துக்கு வழங்குகிறது மாநகராட்சி

Published On 2020-02-21 09:18 GMT   |   Update On 2020-02-21 09:18 GMT
பெரம்பூரில் மெட்ரோ ரெயில் நிலையம் அமைக்க பூங்கா, அம்மா உணவகம் உள்பட 12,722 சதுர மீட்டர் நிலங்களை மெட்ரோ நிறுவனத்துக்கு மாநகராட்சி வழங்குகிறது.
சென்னை:

சென்னை மாநகர போக்குவரத்து நெருக்கடியை குறைப்பதற்காக மெட்ரோ ரெயில் திட்டம் உருவாக்கப்பட்டது. முதல் கட்டமாக வண்ணாரப்பேட்டை -விமான நிலையத்துக்கு 42 கி.மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரெயில் வழித்தடம் அமைக்கப்பட்டு மெட்ரோ ரெயில் சேவை நடந்து வருகிறது.

2-வது கட்டமாக மாதவரம்- சிறுசேரிக்கு ரூ.85 ஆயிரம் கோடி செலவில் மெட்ரோ ரெயில் வழித்தடபாதை உருவாக்கப்பட உள்ளது. தற்போது மண் ஆய்வு பரிசோதனை பணிகள் நடந்து முடிந்துள்ளது. இந்த வழித்தடத்தில் மெட்ரோ ரெயில் நிலையங்கள் அமைப்பதற்காக நிலம் கையகப்படுத்தும் பணிகளில் மெட்ரோ ரெயில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகிறார்கள். பெரம்பூரில் மெட்ரோ ரெயில் நிலையம் உருவாக்குவதற்காக பூங்காக்கள், அம்மா உணவகம் உள்பட 12,722 சதுர மீட்டர் நிலத்தை மெட்ரோ ரெயில் நிறுவனத்துக்கு மாநகராட்சி வழங்குகிறது. இந்த நிலத்தின் மதிப்பு ரூ.41.99 கோடி ஆகும். மெட்ரோ ரெயில் நிறுவனத்துக்கு நிலம் வழங்குவது தொடர்பாக மாநகராட்சி கவுன்சில் கூட்டத்தில் ஏற்கனவே முடிவு செய்யப்பட்டது.

அயனாவரம் 6-வது மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள மாநகராட்சி நிலங்களான பெரம்பூர் முரசொலிமாறன் பூங்காவின் ஒரு பகுதி, அம்மா உணவகம், உடற்பயிற்சி கூடம், கூடைப்பந்து மைதானம் திறந்தவெளி விளையாட்டு மைதானம் ஆகிய நிலங்களை மெட்ரோ நிறுவனத்துக்கு மாநகராட்சி விரைவில் வழங்க உள்ளது.

இது தொடர்பாக மெட்ரோ நிறுவன அதிகாரிகளும் -மாநகராட்சி அதிகாரிகளும் இறுதி கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
Tags:    

Similar News