செய்திகள்
கோவையில் விடிய, விடிய காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட முஸ்லிம்கள்.

கோவையில் விடிய,விடிய போராட்டம் நடத்திய முஸ்லிம்கள்

Published On 2020-02-20 04:07 GMT   |   Update On 2020-02-20 04:07 GMT
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற கோரி கோவையில் முஸ்லிம்கள் விடிய,விடிய போராட்டம் நடத்தினர். அவர்களின் போராட்டம் 2-வது நாளாக இன்றும் தொடர்கிறது.
கோவை:

கோவை மாவட்ட அனைத்து ஜமாத் மற்றும் அனைத்து முஸ்லிம் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் குடியுரிமை திருத்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும், இந்த சட்டத்துக்கு எதிராக தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

அதன்படி நேற்று இரவு 9 மணியளவில் ஆத்துபாலத்தில் உள்ள பள்ளிவாசல் மைதானத்தில் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினர்.

இந்த போராட்டத்துக்கு ஒருங்கிணைப்பாளர் ராஜா உசேன் தலைமை தாங்கினார். உலமா சபை ஒருங்கிணைப்பாளர் அப்துல் ரகீம், மனித நேய ஜனநாயக கட்சி மாவட்ட செயலாளர் அப்பாஸ், த.மு.மு.க. சாதிக் அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் கோவையில் உள்ள ஜமாத் அமைப்பு நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர். போராட்டத்தில் அனைத்து ஜமாத் நிர்வாகிகள், ஆண்கள், பெண்கள் உள்பட 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தங்களது குடும்பத்துடன் கலந்து கொண்டனர். அவர்கள் கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை கையில் பிடித்த படி கோ‌ஷங்கள் எழுப்பினர்.

ஆண்கள், பெண்கள் உள்பட அனைவரும் விடிய, விடிய கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து கோவை மாவட்ட அனைத்து இஸ்லாமிய இயக்க கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் ராஜா உசேன் கூறியதாவது:-

குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆகியவற்றுக்கு எதிராக தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். அதுவரை எங்களின் காத்திருப்பு போராட்டம் தொடரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து இன்று 2-வது நாளாக பல்வேறு இஸ்லாமிய இயக்கங்களை சேர்ந்த ஆண்களும், பெண்களும் தங்களது குடும்பத்துடன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
Tags:    

Similar News