செய்திகள்
நாராயணசாமி

புதுவையில் மதுக்கடை திறப்பு நேரம் குறைக்கப்படும்-நாராயணசாமி அறிவிப்பு

Published On 2020-02-19 11:19 GMT   |   Update On 2020-02-19 11:19 GMT
புதுவையில் மதுக்கடை திறப்பு நேரம் குறைக்கப்படும் என்று முதல்- அமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.

புதுச்சேரி:

புதுவை அரசின் சமூகநலவாரியம், தேசிய சமூக பாதுகாப்பு நிறுவனம், சமூகநீதி மற்றும் அதிகார பகிர்ந்தளித்தல் அமைச்சகம் ஆகியவற்றின் சார்பில் மாணவர்கள், இளைஞர்களிடையே போதை விழிப்புணர்வு ஏற்படுத்த ஆசிரியர்களுக்கு 2 நாள் திறன் மேம்பாட்டு கருத்தரங்கம் இன்றும், நாளையும் கல்வித்துறை மாநாட்டு கூடத்தில் நடக்கிறது.

இதன் தொடக்க விழாவிற்கு கல்வித்துறை இயக்குனர் ருத்ரகவுடு தலைமை தாங்கினார். முதல்- அமைச்சர் நாராயணசாமி குத்துவிளக்கேற்றி கருத்தரங்கை தொடங்கி வைத்து பேசினார். அவர் பேசியதாவது:-

எனக்கு முன்பாக பேசியவர்கள் என்னை புரட்சி முதல்-அமைச்சர் என குறிப்பிட்டு பேசினர்.

ஏற்கனவே ஒருவரை மக்கள் முதல்வர் என்று கூறினர். அவரை வீட்டிற்கு அனுப்பிவிட்டனர். நீங்கள் நினைத்தால்தான் நான் முதல்வர். மக்கள் சக்தி மகத்தான சக்தி. பதவியில் இருக்கும்வரை பாராட்டி பேசுவார்கள். வெளியேறிவிட்டால் திட்டுவார்கள். இந்த பாராட்டுகளுக்கு மயங்குபவன் நான் அல்ல.

புதுவையில் போதை பொருட்களை ஒழிக்க கடுமையான நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகிறோம். புதுவைக்கு கஞ்சா எங்கிருந்து வருகிறது? என நன்றாக தெரியும். திருவண்ணாமலையை சேர்ந்த ஒரு பெண் தாதா கஞ்சாவை விற்பனை செய்கிறார்.

ரெயில் மூலம் கஞ்சா புதுவைக்கு வருகிறது. சிறுவர்கள் மூலம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள், கல்லூரி, பள்ளி மாணவர்களுக்கு விற்கின்றனர்.

புதுவையில் பெரியார் நகர், வில்லியனூர், திருபுவனை, நெட்டப்பாக்கம், மண்ணாடிப்பட்டு பகுதிகளில் கஞ்சா விற்கப்படுகிறது. இதை தடுக்க பலமுறை காவல்துறையினரை அழைத்து கூட்டம் நடத்தியுள்ளோம். 2 நாட்கள் நடவடிக்கை எடுப்பார்கள். நேற்று முன்தினம்கூட அழைத்து கூறினேன். உடனடியாக 6 இடத்தில் குட்கா பிடித்துள்ளனர்.

பள்ளி அருகில் உள்ள கடைகளில்தான் குட்கா விற்கின்றனர். இதை தடுத்து நிறுத்த அரசுக்கு எவ்வளவு கடமை உள்ளதோ? அதே அளவு ஆசிரியர்களுக்கும், சமூகத்திற்கும் உள்ளது. மாணவர்களுடன் அதிக நேரம் செலவழிப்பவர்கள் ஆசிரியர்கள்தான். போதை மறுவாழ்வு மையங்கள் பல இடங்களில் தொடங்கி உள்ளனர்.

புதுவையில் மதுவை ஒழிக்க நினைக்கிறோம். ஆனால் அரசுக்கு வருமானம் அதிலிருந்துதான் வருகிறது. மத்திய அரசு நிதி தருவதில்லை. எனவே, நம்மால் மதுவை உடனடியாக ஒழிக்க முடியவில்லை. அதன் நேரத்தை குறைத்து படிப்படியாக குறைக்க திட்டமிடுகிறோம்.

மாணவர்கள் பாதிக்கப்பட்டால் பெற்றோர்கள் பாதிக்கப்படுவார்கள். மாணவர்கள் பாதிக்கப்படுவதை தடுப்பது ஆசிரியின் கடமை. இந்த கருத்தரங்கில் பெறும் பயனுள்ள தகவல்களை கொண்டு மாணவர்களை நல்வழிப்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை இயக்குனர் யஷ்வந்தையா, சமூகநலவாரிய தலைவி வைஜெயந்தி, வாரிய தலைவர் பெருமாள்சாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News