செய்திகள்
முத்தரசன்

டெல்டாவை பாலைவனமாக்க மத்திய அரசு முயற்சி செய்கிறது- முத்தரசன் குற்றச்சாட்டு

Published On 2020-02-19 10:43 GMT   |   Update On 2020-02-19 10:43 GMT
காவிரி டெல்டா பகுதியை பாலைவனமாக்க மத்திய அரசு முயற்சி செய்கிறது. அதற்கு மாநில அரசு துணை போகிறது என்று முத்தரசன் குற்றம் சாட்டியுள்ளார்.

கும்பகோணம்:

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் நேற்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் உள்ளாட்சி அமைப்புகளில் வெற்றி பெற்றவர்களுக்கான சிறப்பு மாநில மாநாடு நடைபெற்றது.

மாநாட்டுக்கு முன்னாள் எம்.எல்.ஏ. கோ.பழனிச்சாமி தலைமை தாங்கினார். தஞ்சாவூர் மாவட்ட செயலாளர் மு.அ.பாரதி வரவேற்றார். காந்தி கிராம பல்கலைக் கழக பேராசிரியர் முனைவர் ஜி.பழனித்துரை உள்ளாட் சியில் எவ்வாறு நிர்வாகம் செய்ய வேண்டும் என்பது குறித்து சிறப்புரையாற்றினார்.

மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகம் முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளுக்கான பயிலரங்கம் நடைபெற்றதுள்ளது. இதில் 27 மாவட்டங்களைச் சேர்ந்தோர் பங்கேற்றனர். அதே போல் மீதமுள்ள 9 மாவட்டங்களிலும் உள்ளாட்சி அமைப்பு தேர்தல்களையும், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட் சிகளுக்கான தேர்தலை தேர்தல் ஆணையமும், தமிழக அரசும் நடத்த வேண்டும். இதில் ஆணையமும், அரசும் மூடுமந்திரமாக செயல்படுவது கண்டிக்கத்தக்கது.

காவிரி டெல்டாவில் நெல் கொள்முதலில் பெரும் முறைகேடு நடைபெறுவதாக தொடர்ந்து நாங்கள் கூறி வருகிறோம். அந்த முறைகேடுகளை களைய வேண்டும். லாரிக்கு மாமுல் கொடுக்க விவசாயிகளிடமிருந்து கட்டாயமாக மூட்டைக்கு ரூ.40 வசூலிக்கப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும்.

அதை விட்டுவிட்டு, அங்கு பணியாற்றும் பணியாளர்களை பணியிடை நீக்கம் செய்து, நிர்வாகம் நன்றாக நடக்கிறதாக கூறி போலி நாடகம் நடத்துகிறார்கள். தற்போது தொழிற் சங்கத்தின் வேலை நிறுத்தம் செய்யப்போவதாக நோட்டீஸ் வழங்கியுள்ளனர். டாஸ்மாக்குக்கு இலக்கு நிர்ணயம் செய்யும் இந்த அரசு, நெல் கொள்முதலுக்கு இலக்கு நிர்ணயித்து முன் தயாரிப்பு வேலையில் ஈடுபட வேண்டும்.

குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு இஸ்லாமியர்கள் மட்டும் போராடவில்லை. அனைத்து தரப்பு மக்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கேரளா, புதுச்சேரி உள்ளிட்ட 7 மாநிலங்களில் இந்த சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என கூறியுள்ளது போல் தமிழக அரசும் இது தொடர்பாக சட்டமன்றத்தில் விவாதித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக முதல்வர் அறிவித்துள்ளதை வரவேற்கிறோம்.

இதற்காக முதல்வருக்கு பாராட்டு விழா நடத்துவதாக கூறுவது விவசாயிகளை ஏமாற்றும் செயலாகும். காவிரி டெல்டா பகுதியை பாலைவனமாக்க மத்திய அரசு முயற்சி செய்கிறது. அதற்கு மாநில அரசு துணை போகிறது. வரும் சட்டமன்றத் தேர்தலிலும் திமுக கூட்டணி தொடரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News