செய்திகள்
குடியுரிமை சட்டத்தை எதிர்த்து வண்ணாரப்பேட்டையில் பெண்கள் இன்று 6வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வண்ணாரப்பேட்டையில் முஸ்லிம்கள் போராட்டம் 6-வது நாளாக நீடிப்பு

Published On 2020-02-19 10:33 GMT   |   Update On 2020-02-19 10:33 GMT
திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்தை திரும்ப பெறக்கோரி சென்னை வண்ணாரப்பேட்டையில் நடைபெற்று வரும் முஸ்லிம்கள் போராட்டம் இன்று 6-வது நாளாக நீடித்துள்ளது.
ராயபுரம்:

குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து பழைய வண்ணாரப்பேட்டை கண்ணன் ரவுண்டானா பகுதியில் கடந்த 14-ந்தேதி முஸ்லிம்கள் போராட்டம் நடத்தினர்.

சாலை மறியலில் ஈடுபட்ட அவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். அப்போது நடைபெற்ற கல்வீச்சில் போலீசாரும், சில போராட்டக்காரர்களும் காயமடைந்தனர்.

போலீசாரின் தடியடியை கண்டித்தும் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப் பெறக் கோரியும், இதுதொடர்பாக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தியும் அதே பகுதியில் முஸ்லிம்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இன்று 6-வது நாளாக போராட்டம் நீடித்தது. இதில் திரளான முஸ்லிம் பெண்கள் உள்பட பொதுமக்கள் தங்கள் குழந்தைகளுடன் கலந்து கொண்டனர். அவர்கள் குடியுரிமை சட்டத்தை திரும்பப் பெறக்கோரி கோ‌ஷங்கள் எழுப்பினர்.

போராட்டத்தில் நாம் தமிழர் கட்சி நிர்வாகியும், நடிகருமான மன்சூர் அலிகான் தனது மனைவி, குழந்தைகளுடன் நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார்.

முன்னதாக நேற்று போராட்டத்தை வாழ்த்தி காமராஜரின் பேத்தி மயூரி பேசினார். அவர் பேசும்போது, ‘பெண்கள், குழந்தைகளுடன் நடைபெறும் இந்த போராட்டம் நிச்சயம் வெற்றி பெறும்’ என்றார்.

போராட்டத்தையொட்டி அந்த பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
Tags:    

Similar News