செய்திகள்
வெடிவிபத்தில் தரைமட்டமான அறை

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து - 3 பேர் பலி

Published On 2020-02-19 08:28 GMT   |   Update On 2020-02-19 08:28 GMT
சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 3 பேர் பலியானார்கள். படுகாயத்துடன் மீட்கப்பட்டவர்கள் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்
சாத்தூர்:

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள சின்னகாமன்பட்டியில் பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் 30 தொழிலாளர்கள் பணி செய்து வருகின்றனர். பட்டாசு ஆலையில் 3 அறைகள் உள்ளன. இதில் ஒரு அறையில் ரசாயன கலவை வைக்கப்பட்டு இருக்கும். மற்ற 2 அறையில் தொழிலாளர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபடுவது வழக்கம்.

இன்று காலை வழக்கம் போல் தொழிலாளர்கள் வேலைக்கு வந்தனர். அவர்களில் சிலர் சரவெடியில் மருந்து வைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது எதிர்பாராத விதமாக மருந்து கலவை உராய்வு காரணமாக திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் பட்டாசு ஆலையில் இருந்த ரசாயன கலவை அறை தரைமட்டமானது. இந்த விபத்து காரணமாக அங்கு கரும்புகை சூழ்ந்தது. மேலும் தொழிலாளர்களின் கூக்குரலும் கேட்டது.

விபத்து குறித்து தகவல் கிடைத்ததும், போலீசாரும், தீயணைப்பு படையினரும் விரைந்து சென்று மீட்பு பணியில் இறங்கினர். தீ அணைக்கப்பட்டதும், இடிபாடுகளுக்குள் சிக்கி இருந்தவர்களை தீயணைக்கும் படையினர் மீட்டனர்.

இந்த விபத்தில் வள்ளியம்மாள்  (வயது 65), விஜயகுமார் (42) உள்ளிட்ட 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

தரைமட்டமான அறையில் இருந்து லட்சுமணன் (24), லதா (35), முருகன் (30), முத்துலட்சுமி (38), அன்னலட்சுமி (58) ஆகியோர் காயத்துடன் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தொடர்ந்து மீட்பு பணி நடைபெற்று வருகிறது. மேலும் விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



Tags:    

Similar News