செய்திகள்
கொலையாளி பழனியை படத்தில் காணலாம்.

தம்மம்பட்டி அருகே கோடாரியால் வெட்டி பெண் கொலை- கைதான மாமனார் வாக்குமூலம்

Published On 2020-02-18 10:42 GMT   |   Update On 2020-02-18 10:42 GMT
தம்மம்பட்டி அருகே ஆசைக்கு இணங்க மறுத்த பெண்ணை கோடாரியால் வெட்டிகொலை செய்த மாமனார் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

ஆத்தூர்:


சேலம் மாவட்டம் தம்மம்பட்டி அருகே உள்ள உலிபுரம் நரிகரடு பகுதியை சேர்ந்தவர் அறிவழகன் (வயது 45). இவர் ஆத்தூர் அருகே சொக்கநாதபுரம் பகுதியில் உள்ள கூட்டுறவு நிறுவனத்தில் உர விற்பனையாளராக உள்ளார். இவருடைய மனைவி அமுதா (40). நேற்று அறிவழகன் பணிக்கு சென்று விட்டார். வீட்டில் அமுதா மட்டும் தனியாக இருந்தார்.

அப்போது அறிவழகனின் தந்தை பழனி (63) அங்கு வந்தார். அவர் திடீரென்று அமுதாவிடம் தகராறில் ஈடுபட்டார். இதில் ஆத்திரம் அடைந்த அவர் அங்கிருந்த கோடாரியால் அமுதாவை வெட்டினார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். வெட்டுக்காயங்களுடன் அப்போது ரத்தவெள்ளத்தில் அமுதா பிணமாக கிடந்தார். இதை அறிந்த ஏராளமான பொதுமக்கள் சம்பவ நடந்த வீட்டின் முன்பு கூடினர்.

இதனிடையே பழனி, தம்மம்பட்டி போலீஸ் நிலையத்தில் மருமகளை கோடாரியால் வெட்டிக்கொன்று விட்டதாக கூறி சரண் அடைந்தார். பின்னர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அமுதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து பழனியை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் அளித்த வாக்குமூலம் வருமாறு:-

நான் உலிபுரத்தில் வசித்து வருகிறேன். எனது மகன் தனது குடும்பத்துடன் உலிபுரம் நரிகரட்டில் வசித்து வருகிறார். எனது மருமகள் அமுதாவை அடைய வேண்டும் என்று நான் நீண்டகாலமாக துடித்து வந்தேன். அவரிடம் எனது விருப்பத்தை தெரிவித்தேன். ஆனால் அதற்கு அமுதா மறுத்து விட்டார்.

இந்த நிலையில் அவருக்கு வேறு ஒரு நபருடன் பழக்கம் இருப்பது எனக்கு தெரியவந்தது. இதனால் நேற்று எனது மகன் வீட்டுக்கு சென்றேன். அங்கு மருமகள் மட்டும் தனியாக இருந்தார். இதனால் எனது ஆசைக்கு இணங்குமாறு கூறினேன். அதற்கு அவர் மறுத்தார். ஆனால் நான் விடாப்பிடியாக அவரை அடைய முயன்றதால் சத்தம் போட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த நான் அங்கிருந்த கோடாரியை எடுத்து, அமுதாவை சரமாரியாக வெட்டிக் கொன்றேன். பின்னர் போலீசில் சரண் அடைந்தேன். 

இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாணை நடத்தி வருகிறார்கள்.

கொலை செய்யப்பட்ட அமுதாவுக்கு அஜித் (19), ரித்திக் (16) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். அஜித் கீரிப்பட்டி அரசு பள்ளி விடுதியில் தங்கி 12-ம் வகுப்பும், ரித்திக் உலிபுரம் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பும் படித்து வருகின்றனர். 

Tags:    

Similar News