செய்திகள்
பொன்.ராதாகிருஷ்ணன்

போராளிகளின் குரலை மு.க.ஸ்டாலின் ஒலிக்கிறார்- பொன்.ராதாகிருஷ்ணன் கண்டனம்

Published On 2020-02-17 10:03 GMT   |   Update On 2020-02-17 10:03 GMT
மக்கள் மத்தியில் மு.க.ஸ்டாலின் புதிது புதிதாக குழப்பத்தை ஏற்படுத்தி ஆதாயம் தேட முயற்சிப்பதாகவும், போராளிகளின் குரலை ஒலிப்பதாகவும் பொன்.ராதாகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை:

வண்ணாரப்பேட்டை போராட்ட களத்துக்கு முதல்வர் சென்று பேச வேண்டும். குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.

இதற்கு பா.ஜனதா முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-

தி.மு.க. ஆட்சி காலத்திலும் எத்தனையோ போராட்டங்கள் நடந்தது உண்டு. குறிப்பாக அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம். அதில் எத்தனை போராட்டத்தை நேரில் சென்று கலைஞர் கருணாநிதி பேசினார்? அந்த பட்டியலை வெளியிட வேண்டும்.

அதேபோல் மு.க.ஸ்டாலின் துணை முதல்வராக இருந்தபோது எத்தனை போராட்ட களத்துக்கு நேரில் சென்றார் என்பதையும் பட்டியலிட வேன்டும். அதன் பிறகு முதல்வரை போக சொல்லி வலியுறுத்தினால் பொறுப்பான எதிர்க்கட்சி தலைவருக்கு அழகு.

மு.க.ஸ்டாலின் பொறுப்பை உணர்ந்து பேசும் எதிர்க்கட்சி தலைவராக இல்லை என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார். போராளிகளின் குரலாக மட்டுமே ஒலிக்கிறார். அதாவது போராட்டம் தொடரும் என்பதை வெளிப்படுத்தி பின்னணியில் தி.மு.க. செயல்படுவதை வெளிப்படுத்தி உள்ளார்.

நியாயத்தை பார்க்க தவறி விட்டார். மக்கள் மத்தியில் புரிய வைக்க வேண்டியவர் புதிது புதிதாக குழப்பத்தை ஏற்படுத்தி ஆதாயம் தேட முயற்சிக்கிறார். தமிழகத்தில் ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால் அதற்கு முழு பொறுப்பையும் தி.மு.க.தான் ஏற்க வேண்டும்.

குடியுரிமை திருத்த சட்டத்தால் இந்திய இஸ்லாமியர்கள் ஒருவர் கூட பாதிக்கப்பட மாட்டார்கள் என்று அரசு தெளிவுபடுத்தி விட்டது. அண்டை நாடுகளில் இருந்து விரட்டி அடிக்கப்படும் சிறுபான்மையினரான இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், புத்த மதத்தினர் ஆகியோருக்கு அடைக்கலம் கொடுப்பது பற்றி ஏன் எதுவும் பேசவில்லை?

பாகிஸ்தான் முஸ்லிம்களை பற்றி மட்டும் பேசுவது ஏன்? 1947-ல் இந்தியாவில் எதுவும் வேண்டாம் என்று தானே சென்றார்கள். இப்போது அவர்களுக்காக போராடுவது ஏன்?

பாகிஸ்தானத்தை போராடி பெற்றோம். இந்துஸ்தானத்தை சிரித்துக் கொண்டே பெறுவோம் என்று ஜின்னா சொன்னதை நிறைவேற்ற ஸ்டாலின் பாடுபடுகிறாரா? என்பதை தெளிவுபடுத்த வேன்டும்.

தமிழகத்தை கிறிஸ்தவ பூமியாக மாற்றுவோம் என்று லாசரஸ் பேசியதை கண்டிக்க மனம் வரவில்லையே ஏன்? மத மாற்ற சக்திகளின் பின்னணியிலும் தி.மு.க.தான் செயல்படுகிறதா? என்பதை மு.க.ஸ்டாலின் தெளிவு படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News