செய்திகள்
பூண்டி ஏரி

கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா தண்ணீர் கூடுதலாக திறக்க வாய்ப்பு

Published On 2020-02-17 09:45 GMT   |   Update On 2020-02-17 09:45 GMT
கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா தண்ணீர் கூடுதலாக திறக்க வாய்ப்பு உள்ளது என்று ஆந்திரா அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

ஊத்துக்கோட்டை:

சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகள் கடந்த ஆண்டு முழுவதுமாக வறண்டதால் சென்னையில் குடிநீர் பிரச்சினை தலைரித் தாடியது.

பொதுப் பணித்துறை மற்றும் சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் கல்குவாரி மற்றும் விவசாய கிணறுகளில் இருந்தும், ஜோலார்பேட்டையில் இருந்து ரெயில்களில் குடிநீர் கொண்டு வந்து சென்னையில் சப்ளை செய்தனர்.

இந்த நிலையில் கிருஷ்ணா நதி நீர் பங்கிடு திட்டத்தின்படி கண்டலேறு அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று தமிழக அமைச்சர்கள் வேலுமணி, ஜெயக்குமார் ஆகியோர் ஆந்திர மாநில முதல்-அமைச்சர் ஜெகன் மோகன்ரெட்டியை கடந்த ஜூன் மாதத்தில் சந்தித்து கோரிக்கை விடுத்தனர்.

அப்போது கண்டலேறு அணையில் போதிய தண்ணீர் இல்லாத காரணத்தால் பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறக்க இயலாது என்றும், மழை பெய்தால் தண்ணீர் திறந்து விடுவோம் என்றும் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி உறுதி அளித்தார்.

அதன்படி ஆகஸ்டு மாதத்தில் சோமசீலா அணை நீர் பிடிப்பு பகுதியில் வரலாறு காணாத பலத்த மழை பெய்தது. இதனால் சோமசீலா அணையிருந்து கண்டலேறு அணைக்கு தண்ணீர் திறந்து விட்டதால் நீர் மட்டம் கிடுகிடு என்று உயர்ந்தது.

இதனையடுத்து கடந்த செப்டம்பர் 25-ந் தேதி கண்டலேறு அணையிலிருந்து பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் 28-ந் தேதி பூண்டி ஏரியை வந்தடைந்தது.

கண்டலேறு அணையின் கொள்ளளவு 68 டி.எம்.சி. ஆகும். தற்போது அந்த அணையில் 36 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது. அங்கிருந்து வினாடிக்கு 3300 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இந்த தண்ணீர் பூண்டி ஏரிக்கு 264 கனஅடி வீதம் வந்து கொண்டிருக்கிறது.

செப்டம்பர் 28-ந் தேதி முதல் இன்று காலை வரை கண்டலேறு அணையிலிருந்து பூண்டி ஏரிக்கு 5.739 டி.எம்.சி. தண்ணீர் வந்து சேர்ந்துள்ளது.

கிருஷ்ணா நதி பங்கீடு திட்டத்தின்படி ஆந்திர அரசு வருடந்தோறும் 12 டி.எம்.சி. தண்ணீர் பூண்டி ஏரிக்கு திறந்து விட வேண்டும். ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டி.எம்.சி., ஜூன் முதல் செப்டம்பர் வரை 8 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும்.

தற்போது பூண்டி ஏரிக்கு 5.739 டி.எம்.சி. தண்ணீர் வந்து சேர்ந்துள்ளது. இந்தமுறை குறைந்தது 6 டி.எம்.சி. தண்ணீர் கொடுக்க முடிவு செய்ததாக ஆந்திர அதிகாரிகள் ஏற்கனவே தெரிவித்து இருந்தனர். கண்டலேறு அணையில் மேலும் போதிய அளவு தண்ணீர் இருப்பு உள்ளதால் பூண்டி ஏரிக்கு கூடுதல் தண்ணீர் திறக்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்து உள்ளனர்.

எனவே பூண்டி ஏரிக்கு இந்த ஆண்டு கூடுதலாக கிருஷ்ணா நீர் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

பூண்டி ஏரியின் உயரம் 35 அடி. 3231 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். இன்று காலை நிலவரப்படி நீர் மட்டம் 30. 25 அடியாக பதிவானது. 1798 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது.

பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா நதி நீர் 264 கனஅடி வந்து கொண்டிருக்கிறது. பூண்டி ஏரியில் இருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு 453 கனஅடியும் சென்னை குடிநீர் வாரியத்துக்கு வினாடிக்கு 15 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. கண்டலேறு அணையிலிருந்து பூண்டி ஏரிக்கு கூடுதல் தண்ணீர் வந்து சேர்ந்தால் சென்னையில் இந்த ஆண்டு குடிநீர் பிரச்சினை ஏற்படாது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News