செய்திகள்
கைது செய்யப்பட்ட ஆசிரியை பிரியா - கள்ளக்காதலர்கள் ஆகியோரை படத்தில் காணலாம்

கணவரை கொல்ல முயன்றேன் - கள்ளக்காதலர்களுடன் கைதான பள்ளி ஆசிரியை பரபரப்பு வாக்குமூலம்

Published On 2020-02-17 09:09 GMT   |   Update On 2020-02-17 09:09 GMT
கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் கணவரை கொல்ல முயற்சி செய்ததாக கள்ளக்காதலர்களுடன் கைதான பள்ளி ஆசிரியை வாக்குமூலம் அளித்துள்ளார்.
காரிமங்கலம்:

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலத்தை அடுத்த மொட்டலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பொன்னுரங்கம் (வயது 46) விவசாயி. இவரது மனைவி பிரியா (41). இவர் காரிமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு தமிழாசிரியையாக பணியாற்றி வருகிறார்.

இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். இதில் மகள் சென்னையில் உள்ள மருத்துவக்கல்லூரியில் எம்.பி.பி.எஸ். 2-ம் ஆண்டு படித்து வருகிறார். மகன் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்த நிலையில் ஆசிரியை பிரியாவுக்கு பள்ளியில் உடன் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் காரிமங்கலத்தை சேர்ந்த அரசு அதிகாரிகள், அரசியல் கட்சி பிரமுகர்கள், வாலிபர்கள் உள்ளிட்ட பலருடன் கள்ளத்தொடர்பு இருந்தது. இதை கணவர் கண்டித்தார். இதனால் கணவன்- மனைவி அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. ஆத்திரம் அடைந்த பிரியா கணவரை 2 முறை கொலை செய்ய முயற்சி செய்தும் முடியவில்லை.

காரிமங்கலம் மலைக்கோவில் பகுதியைச் சேர்ந்த கள்ளக்காதலர்கள் சக்திவேல் (23), அருண்குமார் (24) ஆகியோருடன் சேர்ந்து கணவருக்கு மயக்க மருந்து கொடுத்து அவரது முகத்தில் தலையணையால் அமுக்கி கொல்ல முயன்றார்.

அவர்களிடம் இருந்து தப்பித்து உயிர் பிழைத்த பொன்னுரங்கம் இதுகுறித்து காரிமங்கலம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து ஆசிரியை பிரியா அவருக்கு உடந்தையாக இருந்த சக்திவேல், அருண்குமார் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். பின்னர் பாலக்கோடு கோர்ட்டில் ஆஜர்படுத்தி பிரியாவை சேலம் பெண்கள் சிறையிலும், மற்ற 2 பேரை சேலம் மத்திய சிறையிலும் அடைத்தனர்.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு பொன்னுரங்கம் பெரியாம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்றபோது அவரை காரை ஏற்றி கொல்ல முயற்சி நடந்தது. காரை ஏற்றியவர் யார்? என்பது குறித்தும் காரிமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் பிரியா போலீசில் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார். இதில் அவர் கூறி இருப்பதாவது:-

கள்ளத்தொடர்புக்கு எனது கணவர் இடையூறாக இருந்து வந்தார். இதனால் கள்ளக்காதலன் உதவியுடன் அவரை காரை ஏற்றி கொல்ல கடந்த 6-ந் தேதி முயற்சி செய்தேன். அப்போது அவர் உயிர் தப்பிவிட்டார்.

இதனால் காரிங்கலத்தைச் சேர்ந்த அருண்குமார், சக்திவேல் ஆகியோருடன் சேர்ந்து வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த எனது கணவரை தலையணையால் அமுக்கி கொலை செய்ய முயன்றோம். இதிலும் அவர் உயிர் தப்பி விட்டார்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

பிரியாவுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்தவர்கள் யார்? யார்? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்காக பிரியாவின் செல்போனில் தொடர்பு கொண்டு பேசியவர்கள் பட்டியலை போலீசார் சேகரித்து அவர்களிடம் விசாரணை நடத்த முடிவு செய்து உள்ளனர். இதனால் அவருடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

பள்ளி மாணவர்களுக்கு பாடம் போதிக்க வேண்டிய ஆசிரியை இப்படி வாழ்க்கையில் தடம்புரண்டு பலருடன் தொடர்பு வைத்துக் கொண்டு கணவரையே கொல்லும் அளவிற்கு துணிந்தது அப்பகுதி மக்களை வேதனை அடைய செய்துள்ளது. இதுபோன்ற ஆசிரியையை உடனே வேலையில் இருந்து டிஸ்மிஸ் செய்ய வேண்டும். மீண்டும் அவரை பணியில் சேர்த்தால் மாணவர்களும் கெட்டுப்போக வாய்ப்பு உள்ளதாக அவர்கள் கூறி உள்ளனர்.
Tags:    

Similar News