செய்திகள்
ஐகோர்ட் மதுரை கிளை

டிஎன்பிஎஸ்சி தேர்வுகளை ரத்து செய்து சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும்- ஐகோர்ட்டில் மனு

Published On 2020-02-13 08:39 GMT   |   Update On 2020-02-13 08:39 GMT
கடந்த 15 ஆண்டுகளாக நடைபெற்ற டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளை ரத்து செய்து சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று ஐகோர்ட் மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மதுரை:

மதுரை ஐகோர்ட்டில் வக்கீல் ரமேஷ் மனுத்தாக்கல் செய்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் டி.என்.பி.எஸ்.சி. நடத்தும் தேர்வுகளுக்கு கடந்த பல ஆண்டுகளாக கட்டமைப்பு வசதிகள் எதுவும் செய்து கொடுக்கப்படவில்லை.

தேர்வுகளை கண்காணிக்க மண்டல அளவில் அலுவலகங்களும் இல்லை. எனவே டி.என்.பி.எஸ்.சி. தேர்வுக்கு வருவாய்த்துறை அதிகாரிகள், ஆசிரியர்கள் மற்றும் போலீசாரையே நம்பிக்கொண்டு இருக்க வேண்டியுள்ளது.

இந்த நிலை டி.என்.பி.எஸ்.சி. முறைகேட்டில் ஈடுபடுபவர்களுக்கு சாதகமாக அமைந்து வருகிறது.



சமீபத்தில் டி.என்.பி.எஸ்.சி. நடத்திய குரூப்-4 தேர்வில் முறைகேடு நடந்துள்ளது. இது தொடர்பாக ஒவ்வொரு நாளும் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கிறது.

குரூப்-4 முறைகேடு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணையில் குரூப்-1, குரூப்-2 தேர்விலும் முறைகேடுகள் நடந்துள்ளது தெரியவந்துள்ளது.

எனவே கடந்த 15 ஆண்டுகளாக நடந்த டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும்.

மேலும் தற்போது நடைபெற்றுள்ள குரூப்-4 தேர்வு முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ. விசாரிக்க உத்தரவிடுவதோடு விசாரணையை ஐகோர்ட்டு நேரடியாக கண்காணிக்கவும் உத்தரவிட வேண்டும்.

மேற்கண்டவாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News