செய்திகள்
புதுவை சட்டசபை

பரபரப்பான நிலையில் நாளை புதுவை சட்டசபை கூட்டம்

Published On 2020-02-11 10:49 GMT   |   Update On 2020-02-11 11:56 GMT
புதுவை சட்டமன்றத்தின் சிறப்பு கூட்டம் நாளை காலை 9.30 மணிக்கு கூடுகிறது. இந்த கூட்டத்தில் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிரான தீர்மானம் விவாதத்துக்கு வருமா? என்பது கேள்விக்குறியாக உள்ளது.
புதுச்சேரி:

நாடு முழுவதும் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

குடியுரிமை சட்ட திருத்தத்தை திரும்ப பெறும் வரை போராட்டம் தொடரும் என காங்கிரஸ்-தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் அறிவித்துள்ளன. இந்த நிலையில் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களிலும், எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களிலும் குடியுரிமை சட்டத்திருத்தத்துக்கு எதிராக சட்டமன்றங்களில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு வருகிறது.

இதுபோல் புதுவை மாநிலத்திலும் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றுவோம் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி அறிவித்திருந்தார். இதற்காக புதுவை சட்டமன்றத்தின் சிறப்பு கூட்டம் நாளை (புதன்கிழமை) கூடுகிறது.

இதனிடையே யூனியன் பிரதேசமான புதுவை மத்திய அரசின் உள்துறை கட்டுப்பாட்டில் உள்ள மாநிலம் என்பதால் மத்திய அரசுக்கு எதிராக சட்டம் நிறைவேற்ற முடியாது என பா.ஜனதாவினர் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

மேலும் புதுவை சட்டமன்ற செயலாளர் வின்சென்ட் ராயரிடம் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக தீர்மானம் சட்டசபையில் நிறைவேற்ற கூடாது என பா.ஜனதாவினர் மனு அளித்தனர்.

தொடர்ந்து நேற்றைய தினம் புதுவை சட்டமன்ற பா.ஜனதா நியமன எம்.எல்.ஏ.க்கள் சாமிநாதன், சங்கர், செல்வகணபதி ஆகியோர் கவர்னர் கிரண்பேடியை சந்தித்து மனு அளித்தனர். அந்த மனுவில் சட்ட விதிமுறைகளை சுட்டிக்காட்டி குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிரான தீர்மானத்தை புதுவை சட்டசபையில் நிறைவேற்ற அனுமதிக்கக்கூடாது என கூறி உள்ளனர்.

இதையடுத்து கவர்னர் கிரண்பேடி புதுவை முதல்- அமைச்சர் நாராயணசாமிக்கு கடிதம் அனுப்பி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

குடியுரிமை திருத்த சட்டம் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதியின் கையெழுத்திடப்பட்டு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த சட்டமானது புதுவைக்கும் பொருந்தும். யூனியன் பிரதேச சட்டங்களின் படி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நாம் கேள்வி எழுப்ப முடியாது. குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக விவாதிக்க புதுவை சட்டமன்றத்துக்கு அதிகாரம் இல்லை.

மேலும் இந்த சட்டம் தொடர்பான பிரச்சனை தற்போது சுப்ரீம் கோர்ட்டில் உள்ளது. சுப்ரீம் கோட்டில் உள்ள எந்த ஒரு பிரச்சனை தொடர்பாகவும் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற அனுமதிக்க முடியாது.

இவ்வாறு அந்த கடிதத்தில் கவர்னர் கிரண்பேடி கூறி உள்ளார்.

பா.ஜனதா கட்சியை சேர்ந்த நியமன எம்.எல்.ஏ.க்கள் 3 பேரும் தன்னிடம் கொடுத்த மனுவினை சட்ட ரீதியாக ஆய்வு செய்து அதன் தொடர்ச்சியாக இந்த அறிவுறுத்தல் கடிதத்தை முதல்-அமைச்சருக்கு அனுப்பியதாக கவர்னர் கிரண்பேடி சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார்.

இருப்பினும் புதுவை அரசு மீது எந்த நடவடிக்கை எடுத்தாலும் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிரான தீர்மானம் சட்டசபையில் நிறைவேற்றப்படும். மத்திய அரசின் எந்த நடவடிக்கையும் சந்திக்க தயார் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.

இதனிடையே புதுவை சட்டமன்றத்தின் சிறப்பு கூட்டம் நாளை காலை 9.30 மணிக்கு கூடுகிறது. இந்த கூட்டத்தில் குயுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிரான தீர்மானம் விவாதத்துக்கு வருமா? என்பது கேள்விக்குறியாக உள்ளது.
Tags:    

Similar News