செய்திகள்
கைதான செய்யது அலி

சப்-இன்ஸ்பெக்டர் கொலை: பயங்கரவாதிகளுக்கு உதவிய மேலும் ஒருவர் கைது

Published On 2020-02-08 08:57 GMT   |   Update On 2020-02-08 08:57 GMT
களியக்காவிளை சோதனை சாவடியில் சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் பயங்கரவாதிகளுக்கு உதவிய மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நாகர்கோவில்:

களியக்காவிளை சோதனை சாவடியில் கடந்த மாதம் 8-ந்தேதி காவல் பணியில் இருந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் சுட்டு கொல்லப்பட்டார்.

தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இக்கொலை சம்பவம் தொடர்பாக நாகர்கோவில் இளங்கடையைச் சேர்ந்த தவுபீக், திருவிதாங்கோட்டைச் சேர்ந்த அப்துல் சமீம் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் இருவருக்கும் பல்வேறு பயங்கரவாத செயல்களில் தொடர்பு இருப்பதை கண்டுபிடித்த போலீசார் உபா சட்டப்பிரிவில் வழக்குப்பதிவு செய்தனர்.

கைதான இருவருக்கும் வெளிமாநிலங்களில் தொடர்பு இருப்பதும், தீவிரவாத செயல்களில் ஈடுபட்டதும் தெரிய வந்ததால் இவர்கள் மீதான வழக்கை என்.ஐ.ஏ. விசாரிக்க தமிழக அரசு பரிந்துரை செய்தது.

இப்பரிந்துரையை ஏற்றுக்கொண்ட மத்திய அரசு இந்த வழக்கை என்.ஐ.ஏ.வுக்கு மாற்றியது. இதையடுத்து தேசிய புலனாய்வு அமைப்பின் அதிகாரிகள் இந்த வழக்கை விசாரித்து வருகிறார்கள்.

என்.ஐ.ஏ. விசாரணை தொடங்கிய பின்பு அப்துல் சமீம், தவுபீக் இருவருக்கும் பின்னணியில் உதவி செய்தவர்கள் யார்? யார்? என்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.

இதில், ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர், இவர்களுக்கு பண உதவி செய்து வந்தது தெரிய வந்தது. அவரை கைது செய்த போலீசார் இவருடன் தொடர்பில் இருந்த இன்னும் பலரை கண்காணித்து வந்தனர்.

இதில், அப்துல் சமீம், தவுபீக் இருவருக்கும் திருவனந்தபுரம் விதுரா பகுதியைச் சேர்ந்த செய்யது அலி என்பவர் வீடு வாடகைக்கு எடுத்துக் கொடுத்ததும், இருவரும் மறைந்திருக்கவும், தப்பிச் செல்லவும் உதவி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. நேற்று திருவனந்தபுரம் சென்ற போலீசார் செய்யது அலியை கைது செய்தனர்.

கைதான செய்யது அலியை போலீசார் நாகர்கோவில் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இதில், அவர் பல்வேறு திடுக்கிடும் தகவல்களை தெரிவித்தார்.

தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இன்று மாலை அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.




Tags:    

Similar News