செய்திகள்
போராட்டத்தில் ஈடுபட்ட எல்ஐசி ஊழியர்கள்

பங்குகள் விற்பனைக்கு எதிர்ப்பு- எல்.ஐ.சி. ஊழியர்கள் போராட்டம்

Published On 2020-02-04 09:29 GMT   |   Update On 2020-02-04 09:29 GMT
இந்திய ஆயுள் காப்பீட்டு கழகத்தின் பங்குகளை தனியாருக்கு விற்கும் மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து எல்.ஐ.சி.ஊழியர்கள் 1 மணி நேரம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை:

எல்.ஐ.சி. என்று அழைக்கக்கூடிய இந்திய ஆயுள் காப்பீட்டு கழகத்தின் பங்குகளை தனியாருக்கு விற்க மத்திய அரசு முடிவு செய்து பட்ஜெட்டில் அறிவித்தது. இதற்கு நாடு முழுவதும் உள்ள எல்.ஐ.சி. ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

1956-ம் ஆண்டு நேரு பிரதமராக இருந்தபோது தனியார் நிறுவனங்களை நாட்டுடமையாக்கி எல்.ஐ.சி.யை உருவாக்கினார். அப்போது மத்திய அரசு மூலதனமாக ரூ.5 கோடி வழங்கியது. அப்போது 3 நிபந்தனைகள் போடப்பட்டன. 95 சதவீத லாபத்தினை மக்களுக்கு திருப்பி தர வேண்டும், 5 சதவீத ஈவுத் தொகையினை மத்திய அரசுக்கு கொடுக்க வேண்டும்.

எல்.ஐ.சி. திரட்டும் நிதியினை 10 சதவீதம் முதல் 20 சதவீதம் வரை நாட்டின் கட்டமைப்பு வளர்ச்சி பணிகளில் முதலீடு செய்ய வேண்டும் என்பதாகும்.

அதன்படி ஒவ்வொரு ஆண்டும் எல்.ஐ.சி. நிறுவனம் நாட்டின் வளர்ச்சிக்காக உதவி வருகிறது. 2019-20-ம் ஆண்டில் மத்திய அரசுக்கு 3 ஆயிரம் கோடி நிதி வழங்கி உள்ளது.

கணக்கில் கொண்டு வரப்படும் எல்.ஐ.சி.யின் சொத்து மதிப்பு ரூ. 31 லட்சம் கோடியாகும். கணக்கில் வராமல் இன்னும் பல ஆயிரம் கோடி சொத்துக்கள் உள்ளன.

ஒவ்வொரு ஆண்டும் பல ஆயிரம் கோடி லாபம் ஈட்டி அரசுக்கும், பாலிசிதாரர்களுக்கும் வழங்கி வரும் நிலையில் அதனை தனியார்மயமாக்க வேண்டிய அவசியம் என்ன என்பது தான் எல்.ஐ.சி. ஊழியர்களின் கேள்வி.

நாடு முழுவதும் ஒரு லட்சத்துக்கு மேல் பணிபுரிந்து வரும் ஊழியர்கள் எல்.ஐ.சி. தனியார்மயமாக்கப்படுவதை கேட்டு அதிர்ச்சியில் உறைந்தனர். அதன் தொழிற்சங்கங்கள் போராட்டத்தில் குதித்துள்ளன.

இன்று நாடு முழுவதும் ஊழியர்கள் மதிய உணவு வேளையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தனியாருக்கு தாரை வார்க்க துடிக்கும் மத்திய அரசின் முடிவை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.

சென்னை, கோவை, திருச்சி, மதுரை, சேலம், நெல்லை உள்ளிட்ட அனைத்து நகரங்களிலும் எல்.ஐ.சி. ஊழியர்கள் மதியம் 12 மணி முதல் 1 மணி வரை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை அண்ணா சாலையில் உள்ள எல்.ஐ.சி. தென்மண்டல தலைமை அலுவலகத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஊழியர்களுக்கு ஆதரவாக முகவர்களும் போராட்டத்தில் குதித்தனர்.

இதுகுறித்து எல்.ஐ.சி. முகவர் ஜி.முத்துசெல்வன் கூறியதாவது:-

அதிக லாபத்தில் இயங்கி வரும் எல்.ஐ.சி. நிறுவனத்தை தனியாருக்கு கொடுக்க வேண்டிய அவசியம் என்ன?

வளர்ச்சி அடைந்த நிறுவனத்தை பங்கு முதலீட்டில் ஏன் கொண்டு வர வேண்டும்? 10 சதவீத பங்குகளை தனியாருக்கு கொடுப்பதன் மூலம் எல்.ஐ.சி.யில் தனியாரின் ஆதிக்கம் படிப்படியாக அதிகரிக்கும். குறிப்பிட்ட பண முதலாளிகள் கையில் எல்.ஐ.சி. சென்றுவிடும். இது நாட்டிற்கு அடுத்த கட்ட பேராபத்தாகும். இது மத்திய அரசின் தவறான முடிவாகும்.

தனியார் மயமாக்குவதற்கு மக்கள் போராட வேண்டும். எல்.ஐ.சி. பொது மக்களின் சொத்தாகும். இது மக்கள் இயக்கமாக மாற எதிர்க்க வேண்டும். பாலிசிதாரர்கள் மட்டுமின்றி பொதுமக்கள் ஒவ்வொருவருக்கும் பொறுப்பு இருக்கிறது.

எனவே மத்திய அரசு இந்த முடிவை திரும்ப பெற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News