செய்திகள்
பாஜக நிர்வாகி விஜயரகுவின் வீட்டிற்கு சென்ற எச்.ராஜா, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்

குடியுரிமை சட்ட விவகாரத்தில் படுகொலை- எச்.ராஜா குற்றச்சாட்டு

Published On 2020-01-29 09:43 GMT   |   Update On 2020-01-29 09:43 GMT
குடியுரிமை சட்ட விவகாரத்தில் பாஜக நிர்வாகி விஜயரகு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தேசிய செயலாளர் எச். ராஜா குற்றம்சாட்டி உள்ளார்.
திருச்சி:

திருச்சி வரகனேரி பென்சனர் தெருவை சேர்ந்த பா.ஜ.க. பாலக்கரை பகுதி மண்டல செயலாளர் விஜய ரகு (வயது 39) நேற்று முன்தினம் காந்தி மார்க்கெட் பகுதியில் படுகொலை செய்யப்பட்டார். அவரை பாபு என்கிற மிட்டாய் பாபு (25) என்பவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்துவிட்டு தப்பியோடி விட்டார்.

இந்த கொலை சம்பவம் திருச்சியில் பதற்றத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது. கொலையாளிகளை கைது செய்யக்கோரி பா.ஜ.க. வினர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். காந்தி மார்க்கெட் பகுதியில் கடைகள் அடைக்கப்பட்டன.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக விஜயரகு செயல்பட்டு வந்ததால் அவரை திட்டமிட்டு மிட்டாய் பாபு மற்றும் சிலர் சேர்ந்து கொலை செய்ததாக அவரது சகோதரர் செந்தில்குமார் காந்தி மார்க்கெட் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணையில் விஜய ரகுவின் மகளை மிட்டாய் பாபு ஒரு தலையாக காதலித்து வந்ததாகவும், இதனை அவர் கண்டித்ததால் மிட்டாய்பாபு தனது நண்பர்களுடன் சேர்ந்து விஜயரகுவை கொலை செய்ததும் தெரிய வந்தது.

கொலை சம்பவம் மதரீதியானது அல்ல என்று திருச்சி மாநகர போலீஸ் கமி‌ஷனர் (பொறுப்பு) அமல்ராஜ் தெரிவித்தார். முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், பா.ஜ.க. தேசிய செயற்குழு உறுப்பினர் சி.பி. ராதாகிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள், இந்து அமைப்புகளை சேர்ந்தவர்கள் விஜய ரகுவின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினர்.

இந்தநிலையில் பா.ஜ.க. தேசிய செயலாளர் எச். ராஜா இன்று காலை திருச்சி வரகனேரியில் உள்ள விஜய ரகுவின் வீட்டிற்கு சென்று அவரது மனைவி தங்கம் மற்றும் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது ரூ.50ஆயிரம் நிதி உதவியையும் வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

குடியுரிமை திருத்த சட்டம் எதிர்ப்பு என்ற பெயரால் தமிழகம் முழுவதும் இஸ்லாமிய பயங்கரவாதம் கட்டவிழ்த்து விடப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக விஜயரகு படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். தடை செய்யப்பட்ட இயக்கங்களை முன்னிறுத்தி தி.மு.க., காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டத்தை முன்னெடுத்துள்ளன.

கொலைக்கு காரணமான முகமது பாபு என்பவரின் பெயரை ஊடகங்களும் காவல்துறையும் மிட்டாய் பாபு என்று மாற்றி கூறுகிறார்கள். குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டங்களுக்கு மாநில அரசு அனுமதி வழங்கக்கூடாது. காவல் துறையினர் பயங்கரவாதிகளை கண்டு பயப்படக்கூடிய ஒரு சூழ்நிலை இருப்பதாக தெரிகிறது.

திருச்சி பாலக்கரை பகுதியில் உள்ள அனைத்து வீடுகளிலும் காவல் துறையினர் சோதனை நடத்த வேண்டும். இஸ்லாமிய பயங்கரவாதம் தமிழகத்தில் தலைவிரித்தாடுகிறது என்பதற்கு விஜயரகுவின் படுகொலை ஓர் உதாரணம்.

காவல் துறையினர் ஒரு தலைபட்சமாக பாரபட்சமாக இருப்பது, இத்தகைய படுகொலை நடக்க காரணமாக இருக்குமோ? என்ற சந்தேகம் வருகிறது. இந்த விவகாரத்தை திசை திருப்பாமல் காவல் துறையினர் நேர்மையாக விசாரணை நடத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதனிடையே இந்த கொலை சம்பவம் தொடர்பாக கூடுதல் டி.ஜி.பி. ஜெயந்த் முரளி திருச்சி வந்து விசாரணை நடத்தினார். கொலையாளிகளை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படையினர் 16 பேரை பிடித்து விசாரணை நடத்தி வரும் நிலையில், முக்கிய குற்றவாளிகள் நாகப்பட்டினத்தில் பதுங்கி இருக்கலாம் என்பதால் அங்கு சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இந்த கொலை சம்பவம் குறித்து தேசிய புலனாய்வு அமைப்பு விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தி இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் திருச்சி மாநகர போலீஸ் கமி‌ஷனரிடம் புகார் மனு அளித்துள்ளார்.


Tags:    

Similar News