செய்திகள்
தீக்குளிக்க முயன்ற பெண்களை படத்தில் காணலாம்.

கந்துவட்டி கொடுமையால் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் 2 பெண்கள் தீக்குளிக்க முயற்சி

Published On 2020-01-27 11:26 GMT   |   Update On 2020-01-27 11:26 GMT
நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் கந்துவட்டி கொடுமையால் 2 பெண்கள் தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நெல்லை:

நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தென்காசி அருகே உள்ள காசிதர்மத்தை சேர்ந்த தொழிலாளி இசக்கிமுத்து தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் கந்து வட்டி கொடுமையால் தீக்குளித்து தற்கொலை செய்தார். இது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இதைத்தொடர்ந்து கந்து வட்டி புகார்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க தமிழகஅரசு கடும் உத்தரவிட்டது. மேலும் இது போன்ற சம்பவங்கள் நிகழாமல் இருக்க மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்படும் ஒவ்வொரு திங்கட்கிழமையன்றும் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு வருகிறது.

மனு கொடுக்க வருபவர்களை போலீசார் தீவிர சோதனை நடத்திய பிறகே கலெக்டர் அலுவலகத்திற்குள் அனுமதித்து வந்தனர். இந்த நிலையில் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வழக்கம் போல் இன்று நடந்தது. இந்த கூட்டத்திற்கு கலெக்டர் ஷில்பா தலைமை தாங்கி பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை வாங்கினார்.

மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் மனு அளித்தனர். அவ்வாறு மனு அளிக்க வந்த களக்காட்டை சேர்ந்த 2 பெண்கள் கலெக்டர் அலுவலக வளாகத்தில் திடீரென தங்களது உடலில் மண்எண்ணையை ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். அவர்களை அங்கு நின்ற பொதுமக்கள் மற்றும் ஊழியர்கள் தடுத்து காப்பாற்றினர்.

நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள சிதம்பராபுரத்தை சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி கிருஷ்ணவேணி (வயது31). முருகனின் தம்பி புகழ்சேட்டு. இவரது மனைவி பாமா (29). அண்ணன்-தம்பி இருவரும் கடன் வாங்கி சோடா கம்பெனி நடத்தி வந்தனர். இதில் நஷ்டம் ஏற்பட்டதால் கம்பெனியை மூடி விட்டனர்.

அதன்பிறகு முருகன் கேரளாவில் கூலி வேலை செய்து வருகிறார். புகழ்சேட்டு தனது ஊரிலேயே கட்டிட வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சோடா கம்பெனி நடத்த பெற்ற கடனை அடைப்பதற்காகவும், குடும்ப செலவுக்காகவும் கிருஷ்ணவேணி மற்றும் பாமா ஆகியோர் அப்பகுதியை சேர்ந்த பெண்களிடம் பகுதி பகுதியாக ரூ.2 லட்சத்து 40 ஆயிரம் கடன் வாங்கியுள்ளனர்.

இதற்கு வட்டியாக லட்சக்கணக்கில் பணம் கொடுத்ததாக கூறப்படுகிறது. கடந்த சில மாதங்களாக குடும்ப சூழ்நிலை காரணமாக அவர்களால் வட்டி கட்ட முடியவில்லை. ஆனால் பணம் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பி தருமாறு நெருக்கடி கொடுத்தாக தெரிகிறது.

இந்நிலையில் கடந்த மாதம் கிருஷ்ணவேணி மற்றும் பாமா ஆகிய 2 பேரும் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து கடன் கொடுத்தவர்கள் அதிக அளவு கந்துவட்ட கடன் கேட்டு தங்களை மிரட்டுவதாகவும், இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மனு கொடுத்தனர். ஆனால் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க போலீசார் காலம் தாழ்த்தி வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த முருகன், அவரது மனைவி கிருஷ்ணவேணி, புகழ் சேட்டு, அவரது மனைவி பாமா ஆகிய 4 பேரும் இன்று நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் பின் வாசல் வழியாக மனு கொடுக்க வந்தனர். முருகனும், புகழ் சேட்டுவும் மனுவை பதிவு செய்வதற்காக கலெக்டர் அலுவலகத்திற்குள் சென்றனர்.

அப்போது மெயின் வாசலில் நின்று கொண்டிருந்த கிருஷ்ண வேணியும், பாமாவும் திடீரென தாங்கள் கையில் வைத்திருந்த மண்எண்ணையை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். இதை பார்த்த அங்கு நின்ற ஊழியர்களும், பொதுமக்களும் அதிர்ச்சியடைந்து அவர்களை உடனடியாக தடுத்து நிறுத்தினர்.

இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசார் விரைந்து வந்து அவர்கள் மீது தண்ணீர் ஊற்றி அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் மேற்கண்ட தகவல்களை கூறினர்.

கலெக்டர் அலுவலகத்தில் 2 பெண்கள் தீக்குளிக்க முயன்ற சம்பவத்தை அறிந்த கலெக்டர் ஷில்பா, மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து அந்த பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது அவரிடம் எந்த ஒரு பிரச்சினைக்கும் தற்கொலை தீர்வாகாது. உங்களது மனு குறித்து விசாரணை நடத்த சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. உங்களது பிரச்சினையில் கந்துவட்டி பிரச்சினை இருப்பது தெரியவந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.மேலும் உங்களது கடன்களை அடைக்க வங்கிகள் மூலம் கடன் வழங்க ஏற்பாடு செய்கிறேன் என கலெக்டர் கூறினார்.

இதைத்தொடர்ந்து அவர்கள் மீண்டும் அசம்பாவித சம்பவங்களில் ஈடுபடாமல் இருப்பதற்காக 4 பேரையும் பாளை போலீசார் விசாரணைக்கா போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். கலெக்டர் அலுவலகத்தில் 2 பெண்கள் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News