செய்திகள்
மதுரை ரெயில் நிலையம்

மதுரை ரெயில்வேயின் கடந்த ஆண்டு வருமானம் ரூ.632 கோடி

Published On 2020-01-27 10:42 GMT   |   Update On 2020-01-27 10:42 GMT
மதுரை ரெயில்வேயின் கடந்த ஆண்டு வருமானம் ரூ.632 கோடி என்று குடியரசு தின விழாவில் கோட்ட மேலாளர் லெனின் கூறினார்.
மதுரை:

மதுரை ரெயில்வே மைதா னத்தில் நேற்று குடியரசு தினவிழா நடந்தது. இதில் கோட்ட மேலாளர் லெனின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தேசியக்கொடியை ஏற்றி வைத்து ரெயில் வே பாதுகாப்பு படை மற்றும் ரெயில் வே மேல் நிலைப்பள்ளி மாணவ, மாணவிகளின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

மதுரை ரெயில்வே கோட்டம் 2019-ம் ஆண்டு ரூ. 632.60 கோடி வருமானம் ஈட்டி உள்ளது. இது முந்தைய ஆண்டை விட 8.90 சதவீதம் அதிகம்.

ரெயில் சேவை கூடுதலாக 299 சிறப்பு ரயில்களை இயக்கி உள்ளோம்.

இதுதவிர பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் முக்கிய ரெயில் நிலையங்களில் 12 கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டு உள்ளன. பழனி-கோவை இடையே சேவா ரெயிலை அறிமுகப்படுத்தி உள்ளோம்.

ரெயில் பாதை பராமரிப்பு பணிகளுக்கு இடையிலும் எக்ஸ்பிரஸ்-பயணிகள் ரெயிலை 94 சதவீதம் நேரம் தவறாமல் இயக்கப்பட்டு உள்ளன.

ரெயில்களில் பயணச்சீட்டு இன்றி பயணித்தவர்களிடம் ரூ. 4.87 கோடி அபராதமாக வசூலிக்கப்பட்டு உள்ளது. இது கடந்த ஆண்டை விட 43.6 சதவீதம் அதிகம்.

அடுத்தபடியாக பயணிகள் முன்பதிவு சீட்டு பெறும்போது, அன்னாரின் பயண நிலவரம் குறித்து உடனுக்குடன் குறுஞ்செய்தி அனுப்பப்படுகிறது.

38 ரெயில் நிலையங்களில் அதிவேக இலவச வை-பை இணையதள வசதி அமைக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் மதுரை கோட்டத்தில் 95 ரெயில் நிலையங்களிலும் இந்த வசதியை ஏற்படுத்தி உள்ளோம்.

மதுரை- போடி அகல ரெயில் பாதை திட்டத்தில் மதுரை-உசிலம்பட்டி இடையே வெகுவிரைவில் ரெயில் சேவையை தொடங்க உள்ளோம்.

வைகை எக்ஸ்பிரஸ், திருப்பதி எக்ஸ்பிரஸ், ராமேஸ்வரம்-குமரி எக்ஸ்பிரஸ், ராமேஸ்வரம்- ஓகா எக்ஸ்பிரஸ் ஆகியவற்றில் நவீன வசதிகளுடன் கூடிய ரெயில் பெட்டிகள் இணைக்கப்பட்டு உள்ளன.

பயணிகள் தவறவிட்ட 65 உடைமைகள் மற்றும் ரூ. 23 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை மீட்டு ஒப்படைத்து உள்ளோம்.

ரெயில்வேயில் வீணாகும் பொருட்கள் ஏலம் விடப்பட்டு, அந்த வகையில் ரூ. 5.23 கோடி வருமானம் ஈட்டப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டு ஈட்டப்பட்ட தொகை ரூ. 4.91 கோடி ஆகும்.

தென் மண்டல அளவில் பயணிகளின் புகார்- குறைகளை தீர்த்து வைப் பதில் மதுரை கோட்டம் முதலிடத்தில் உள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. அதன்பிறகு ரெயில்வே பாதுகாப்பு படைவீரர்களின் சாகச நிகழ்ச்சி இடம்பெற்றது.

விழாவில் கூடுதல் கோட்ட ரெயில்வே மேலாளர்கள் லலித்குமார் மன்சு கானி, ஓ.பி.ஷா, ஊழியர் நல அதிகாரி சுதாகரன், ரெயில்வே பாதுகாப்பு படை கமி‌ஷனர் அன்பரசு, செய்தி தொடர்பு அதிகாரி வீராசுவாமி உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News